கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதை சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய ஆய்வு அறிக்கை தெரிவித்து உள்ளது.
சீனாவின் ஹூபே மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 50 நாட்கள் ஆகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868- ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக உள்ளது.
வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைய தொடங்கி இருப்பதாக சீன தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலின் மையப்பகுதியான உகானில், பாதிப்பின் வேகம் கடந்த மாதம் 28-ந் தேதி 32.4 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அது 21.6 சதவீதமாக குறைந்திருப்பதாக அவர்கள் கூறினர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.சி.டி.சி) ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வு விவரம் சீன தொற்றுநோயியல் இதழில் புதிய கொரோனா வைரஸ் நிமோனியாவின் தொற்றுநோயியல் அம்சங்களின் பகுப்பாய்வு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
80 சதவிகிதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகள் மிகவும் லேசானவை என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் ஆபத்தில் உள்ளனர் என்றும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.சி.டி.சி) ஆவணங்கள் தெரிவித்து உள்ளது. 80.9% நோய்த்தொற்றுகள் லேசானவை, 13.8 சதவிகிதம் கடுமையானவை மற்றும் 4.7 சதவிகிதம் மட்டுமே ஆபத்தானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது, ஆனால் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே அந்த விகிதம் உயருகிறது. பாலின விகிதத்தைப் பார்க்கும்போது, பெண்களை விட (1.7 சதவிகிதம் ) ஆண்கள் இறக்கும் வாய்ப்பு (2.8 சதவிகிதம்) அதிகம்.
9 வயது வரையிலான குழந்தைகளுக்கு, எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை, 39 வயது வரை, இறப்பு விகிதம் 0.2 சதவிகிதம் ஆக குறைவாகவே உள்ளது. 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இது 0.4 சதவிகிதமாகவும் , 50 களில் இது 1.3 சதவிகிதமாகவும் 60 களில் இது 3.6 சதவிகிதமாகவும் மற்றும் 70 களில் இது 8 சதவிகிதமாக உள்ளது.
இந்த வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து இருப்பதையும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உகானில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர், குறிப்பாக ஜனவரி தொடக்கத்தில், ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் விகிதம் குறைவதற்கு முன்னர், ஜனவரி முதல் 10 நாட்களில், பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
உகான் நகரில் ஒரு மருத்துவமனை இயக்குனர் செவ்வாய்க்கிழமை வைரஸால் இறந்துள்ளார். 51 வயதான லியு ஜிமிங், உகானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குநராக இருந்தார் – வைரஸ் மையத்தின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாகும் இது. அவர் இதுவரை இறந்த மிக மூத்த சுகாதார அதிகாரிகளில் ஒருவர் ஆவார்.
நோயாளிகளுக்கு நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கும் 422 மருத்துவ நிறுவனங்களில், மொத்தம் 3,019 மருத்துவ ஊழியர்கள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவற்றில் 1,716 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 11-க்குள் ஐந்து பேர் இறந்துவிட்டனர், இது ஆய்வில் சேர்க்கப்பட்ட தரவுகளின் கடைசி நாள் எடுக்கப்பட்டது ஆகும்.
ஹூபே மாகாணத்தின் இறப்பு விகிதம் நாட்டின் பிற பகுதிகளின் 0.4 சதவீகிதத்துடன் ஒப்பிடும்போது 2.9 சதவிகிதம் என்று காட்டுகிறது. ஒட்டுமொத்த இறப்பு விகிதம் 2.3 ஆக உள்ளன.
தற்போதுள்ள எந்த நோய்கள் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்பதையும் இந்த ஆய்வு அடையாளம் காட்டுகிறது. இது இருதய நோயை முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
ஒட்டுமொத்த தொற்றுநோய் பரப்புவது குறைவது என்பது முழு நகரங்களையும் தனிமைப்படுத்துதல், முக்கியமான தகவல்களை ஒளிபரப்புதல் (எ.கா., கை கழுவுதல், முகமூடி அணிவது மற்றும் சிகிச்சை தேடுவது) பல சேனல்கள் மூலம் அதிக முறை ஒளிபரப்புதல் போன்றவைகளால் குறைகிறது என்று ஆய்வு கூறுகிறது.
கொரோனா வைரஸ்கள் குறித்து முன்னர் வெளியிடப்பட்ட 22 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்வதில் புதிய ஆராய்ச்சி ஈடுபட்டுள்ளது, இது கொரோனா வைரஸ் பற்றிய நுண்ணறிவை வழங்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பொதுவான வீட்டுப் பொருட்களுடன் சுத்தம் செய்வது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும், ஆராய்ச்சியின் படி, கொரோனா வைரஸ்கள் “62-71 சதவிகிதம் எத்தனால், 0.5 சதவிகிதம் ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது 0.1% சோடியம் ஹைபோகுளோரைட்” அல்லது ப்ளீச் மூலம் மேற்பரப்பு கிருமி நீக்கம் செய்முறைகளால் திறமையாக செயலிழக்க செய்ய முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் மக்களைத் தொற்றும் திறன் கொண்ட அசுத்தமான மேற்பரப்புகள் மற்றும் பொருள்களில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை.
ஆனால் ஒரு நபர் வைரஸ் உள்ள ஒரு மேற்பரப்பு அல்லது பொருளைத் தொட்டு, பின்னர் அவர்களின் சொந்த வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும். ஆனால் இது முக்கிய வழி என்று கருதப்படவில்லை.
வைரஸ் சில மேற்பரப்புகளில் 48 மணி நேரம் வரை வாழக்கூடும், மேலும் மேற்பரப்பு சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படாவிட்டால் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும். என சி.சி.டி.சி.யின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.