சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் பிரியா கிருஷ்ணசுவாமி சொல்கிறார்:-
தமிழ் ரசிகர்களின் ரசனை மாறியிருக்கிறது. உலக சினிமாவை பார்க்கும் ஆர்வம் அவர்கள் இடையே வந்து இருக்கிறது. அந்த ரசனைக்கு தீனி போடும் வகையில், ‘பாரம்’ படம் அமைந்து இருக்கிறது. 98 நிமிடங்கள் ஓடும் இந்த படம், சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றுள்ளது.
கதை, ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை காட்டுகிறது. 100 வயதை நெருங்கும் சில முதியவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள். மரணம் தங்களை தழுவாதா? என்ற ஏக்கத்துடன் அவர்களும், எப்போது அவர்கள் போய் சேருவார்கள்? என்று எதிர்பார்க்கும் குடும்பத்தினரும் கதையில் பிரதான பாத்திரங்களாக இருப்பார்கள்.
அதுபோன்ற முதியவர்களை, ‘தலைக்கூத்தல்’ என்ற சடங்கு மூலம் கருணை கொலை செய்வது இப்போதும் சில கிராமங்களில் இருந்து வருகிறது. அதை கருவாக வைத்து, ‘பாரம்’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள். பிரியா கிருஷ்ணசுவாமி, அர்ட்ரா ஸ்வரூப் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படம், ஐதராபாத்தில் வளர்ந்தது. படத்தை டைரக்டர் வெற்றிமாறன், எஸ்.பி.சினிமாஸ் நிறுவனத்தினர் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடுகிறார்கள்.