யாழ். நகரில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நகரில் அமைந்துள்ள கடையொன்றின் ஊழியரான மானிப்பாய், சங்கானையைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) பகல் மின் தாக்குதலுக்கு உள்ளான இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
——
மினிப்பே, 05ஆம் கட்டைப் பகுதியில் ஹதகனாவ வட்டமுல்ல பிரதேசத்திலுள்ள வயல்வெளியை அண்டிய பகுதியில் இரு யானைகள் உயிரிழந்துள்ளன.
இன்று (18) அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் மற்றும் வனஜீவராசி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வயல் நிலத்தை சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த யானைகள் இரண்டும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
——-
தடைகளை நீக்கி சுதேச கைத்தொழில்துறையையும் மற்றும் முதலீட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கைத்தொழில் துறையை ஆரம்பிப்பதற்கும் அவற்றை பேணி வருவதற்கும் தடையாக உள்ள பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள விசேட வாய்ப்பு வளங்கள் குறித்து ஆராய வேண்டியதன் அவசியம் பற்றியும் கைத்தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்திக்கான அமைச்சுக்களுக்கிடையிலான செயலணியுடன் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மோட்டார் வாகனங்களை ஒன்றுசேர்த்தல், உலோகங்கள், பாதணிகள், தோற் பொருட்கள், ஆடைகள், மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள், தளபாடம் மற்றும் அழகு சாதன உற்பத்திப் பொருட்கள், கைத்தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.