கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீன குடிமக்கள் நாளை முதல் ரஷ்யா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. தற்போது வரை கொரானோ வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகள், சீன நாட்டவர்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில், சீனாவின் அண்டை நாடான ரஷ்யாவும் ஏற்கனவே, சீனாவுடனான 4,250-கி.மீட்டர் தொலைவிலான எல்லையை மூடியது. இருப்பினும், மேற்கு பகுதி வழியாக, சீன மக்கள் சுற்றுலா நோக்கத்திற்காகவும் கல்வி , பணி நிமித்தமாக ரஷ்யாவுக்குள் வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் சீன நாட்டு மக்கள் ரஷ்யாவிற்குள் நுழைய முற்றிலும் தடை செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ரஷ்யாவின் துணை பிரதமர் வெளியிட்டார். கல்வி, சுற்றுலா என எந்த வகையிலும் சீன மக்கள், ரஷ்யா வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.