பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் பாடசாலை தோறும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பாடசாலை வளாகத்துக்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பில் இடம்பெறக்கூடிய சம்பவங்களை உடனுக்குடன் அறியத்தரும் வகையில் 0777128128 எனும் அவசரதொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பொலிஸ் திணைக்களமும் அபாயகரமான ஔடதங்களை கட்டுப்படுத்தும் தேசிய அதிகாரசபையும் கல்வியமைச்சும் இணைந்தே மேற்படி வேலைத்திட்டத்தை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரை பாடசாலை மாணவர்களிடையிலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் 49 பாடசாலைகளை இலக்கு வைத்து, ‘பாதுகாப்பான நாளை’ எனும் தொனிப்பொருளில் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று(18) கல்வியமைச்சில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் என். எம்.எம் சித்ரானந்த, கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் எச்.யூ பிரேமதிலக்க, பாடசாலைகளுக்கான சுகாதார மற்றும் போஷணைப் பணிப்பாளர் ரேனுக்கா பீரிஸ், மேல்மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது உரையாற்றிய பிரதி பொலிஸ் மாஅதிபர் மேல் மாகாணத்திலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையான மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருப்பதாக கூறினார். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்புகளின்படி ஹெரோயின், கஞ்சா,போதை மாத்திரைகள்,சாராயம் என்பவற்றுக்கு 02 இலட்சத்து 30 ஆயிரத்து 982 மாணவர்கள் அடிமையாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த எண்ணிக்கை நாடு முழுவதுமுள்ள ஏனைய மாவட்டங்களிலும் பார்க்க அதிகம் என்பதால் இம்மாணவர்களை மீட்கவும் ஏனைய மாணவர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் விளக்கமளித்ததாவது-
கடந்த 2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் பாவனை காரணமாக பொலிஸார் 60 ஆயிரத்து 506 பேரை கைதுசெய்துள்ளனர். விற்பனையாளர்களதும் அதனை பாவிப்பவர்களதும் போலி வார்த்தைகளை நம்பியே அநேகமான மாணவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர்.
போதைப் பொருட்களை பாவிப்பதனால் நீண்ட நேரம் கண் விழிக்கலாம், சமிபாட்டு சக்தி அதிகரிக்கும், சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும், பாலியல் ரீதியான கவர்ச்சி கிடைக்கும், பாலியல் சக்தி அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதனை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும். இதுபற்றி அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும். இதற்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.