கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் சேசு என்ற மீனவரின் கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முன்னதாக, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
புதன்கிழமை நள்ளிரவு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்களை கடலில் கொட்டியும், வலைகளை வெட்டி எறிந்ததுடன் இலங்கை கடற்பகுதியில் மீண்டும் மீன்பிடிக்கக்கூடாது என எச்சரித்து விரட்டி அடித்தனர்.
இதனால் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனே விசைப்படகுகளை ராமேசுவரம் நோக்கி திருப்பினர்.
அப்போது கிங்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நோக்கி இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் விசைப்படகில் உள்ள கண்ணாடியில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சிதறியது. இதில் படகிலிருந்து சேசு (53) என்ற மீனவர் கண்ணில் காயம் அடைந்துள்ளது.
படகிலிருந்து கிங்சன், முருகன், மாரியப்பன் ஆகிய மூன்று மீனவர்களும் உடனடியாக காயம் அடைந்த மீனவரை வியாழக்கிழமை அதிகாலை கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கண்ணில் காயம் ஏற்பட்டிருந்ததால் மதுரையில் உள்ள தனியார் (அரவிந்த் கண்) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் சரக கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட படகினை ஆய்வு செய்தனர்.