இந்தியாவை திருத்தப் புறப்படும் இந்தியன் வெறும் ரிவீற் இந்தியன்


இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து மூவர் மரணம் விபரமான செய்திகள்..!

நுட்ட ஈடு வழங்குவது யார்..?

ஒழுங்கான காப்புறுதி உண்டா..?

இவர்கள் அனுமதி பெற்ற ஊழியரா..?

சுரியான பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டதா..?

கருவிகள் பாவனைக்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டதா..?

வெறும் அனுதாபங்களையும் ரிவிற் செய்வதையும் விட பாதிக்கப்பட்டவருக்கு ஒழுங்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..?

இந்தியாவில் படப்பிடிப்பில் சரியான ஒழுங்குகள் இருப்பதில்லை என்ற பாதுகாப்பு குறைபாடுகள் நிறையவே உள்ளன.

இந்தியன் 2 ல் இந்தியாவை திருத்தப் புறப்படும் இந்தியன் நடைமுறையில் வெறும் ரிவீற் இந்தியன் என்பதை ரசிகர்கள் புரிவார்களா..?

இனி இது குறித்த செய்திகள்..

———–

கமல்ஹாசன் படப்பிடிப்பில் நேற்று ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி. பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசேஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.நேற்று மாலை நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் துணை நடிகர்-நடிகைகள் பங்கேற்ற காட்சியை படமாக்கி கொண்டிருந்தனர்.

மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்தது. இதில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒரு பெண் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தனியார் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர்.

கமல்ஹாசன் டுவிட்

இந்த நிலையில், கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

——

ஒருநொடிப் பொழுதுதான். எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம் என்று ‘இந்தியன் 2’ விபத்து குறித்து ஸ்டைலிஸ்ட் சீமா பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தற்போது படத்தின் சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் இயக்குநர் ஷங்கர், கமல் உள்ளிட்டோர் உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்தின் போது நடந்த நிகழ்வினை ஸ்டைலிஸ்ட் சீமா தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில், “தூக்கமில்லாத இரவு. என்னால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கமல்ஹாசன், காஜல் அகர்வாலோடு சேர்ந்து அந்த கிரேனின் கீழ் நானும் இறந்திருக்க வேண்டும். நாங்கள் தப்பித்துவிட்டோம் என்று உணர்ந்தபோது இன்னொரு பக்கத்திலிருந்து இறந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு பெரிய விபத்திலிருந்து கமல்ஹாசனுடன் சேர்ந்து தப்பித்திருக்கிறேன். ஒருநொடிப் பொழுதுதான். எங்கள் கூடாரத்திலிருந்து வெளியே குதித்தோம். திரும்பிப் பார்க்கும்போது எங்களது நாற்காலிகள் பெரிய கிரேனால் நொறுக்கப்பட்டிருந்தன இதோ சில புகைப்படங்கள். எங்கள் மூன்று நண்பர்களை இழந்தது துரதிர்ஷ்டம். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார் சீமா.

’இந்தியன் 2’ விபத்து தொடர்பாகப் பலரும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

விபத்தைத் தொடர்ந்து மறுபடியும் எப்போது படப்பிடிப்பு என்று சொல்கிறோம் எனப் படத்தில் பணிபுரியும் அனைவருக்குமே படக்குழு தெரிவித்துள்ளது.

——

இந்தியன் 2′ படப்பிடிப்புத் தளத்தின் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம் குறித்து காஜல் அகர்வால் ட்வீட் செய்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதன் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள நசரத்பேட்டை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து, அங்கு கமல் – காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வந்தார்கள்.

சண்டைக்காட்சி என்பதால் பிரம்மாண்ட கிரேன் மூலம் விளக்குகள் அமைத்து, படமாக்கி வந்தார் ஷங்கர். இதில் நேற்று (பிப்ரவரி 19) கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இறந்தவர்கள் ஷங்கரின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்தின்போது படப்பிடிப்புத் தளத்திலிருந்த காஜல் அகர்வால் தனது மனநிலையை ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பதிவில், “என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அன்பு. தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையைத் தரட்டும்.

நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடி மட்டுமே ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts