இலங்கைக்கு வரும் வெளிநாட்டவரை விசாரிக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட திட்டத்தில் பொலிஸ் திணைக்களமும் நெருங்கிச் செயற்படுவதாக போக்குவரத்து பொலிஸின் தலைமையதிகாரியான, பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (19)கூறினார்.
பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்:
பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றை படம் பிடித்துவிட்டு நாட்டைவிட்டு 24மணி நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
உரிய விசா இல்லாது அல்லது விசா முடிவுற்ற பின்னர் நாட்டில் தங்கியிருப்போர் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து விசேட திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய பிரஜைகள் தொடர்பாகவே இடம்பெறுகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 216சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் இடம்பெற்று 10மாதங்கள் கடந்துவிட்டன.
தாக்குதல் இடம்பெற்ற 2019ஏப்ரல் 21ஆம் திகதி முதல் குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவு (CID), பயங்கரவாத விசாரணை திணைக்களம் (TID) மற்றும் கொழும்பு குற்றச் செயல்கள் பிரிவு (CCD) ஆகியவற்றுடன் இணைந்து, பொலிஸார்செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது 6பெண்கள் உட்பட 153சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன. இதேவேளை இன்ரர்போல், அவுஸ்திரேலிய பொலிஸ் மற்றும் அமெரிக்க பொலிஸ் ஆகியோரின் உதவியும் இலங்கைக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில் மூன்று T 56துப்பாக்கிகள் உள்ளிட்ட 9ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் இரண்டு கார்கள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக CID, TID, CCD ஆகியவற்றில் உள்ள 11அணிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸின் தலைமையதிகாரி கூறினார். அத்துடன் இந்திய பொலிஸ் அதிகாரிகள் தற்போது இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.