கொரோனா பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.
சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2236 லிருந்து 2345 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75, 465 லிருந்து 76,288 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் சிங்கப்பூருக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா கூறியதாவது:-
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும். நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, வியட்நாமில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும். காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.