பிரபல டைரக்டர் பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங் களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.
பிரபல டைரக்டர் பிரியதர்ஷன்- நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங் களுக்கு முன்பு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’வில் நடித்தார். அடுத்து மலையாள சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை பூர்த்தியாகியிருக்கிறது. ‘வரனை ஆவசியமுண்டு’ (மணமகன் தேவை) என்ற படத்தில் நடித்து, கேரள ரசிகர் களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல டைரக்டர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனுப் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தயாரித்திருக்கும் முதல் படம் இது. படத்தின் வெற்றியில் பூரித்துப் போயிருக்கும் கல்யாணியிடம் சில கேள்விகள்:
நீங்கள் நினைத்ததுபோல் வெற்றி வசப் பட்டுவிட்டதாக கருதுகிறீர்களா?
நான் எப்போதும் நிறைய ஆசைகளை வளர்த்துக்கொள்வதில்லை. மலையாளத்தில் நல்ல படம் ஒன்றில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். சுரேஷ்கோபி, ஷோபனா போன்றவர்களோடு நடிக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. நான் நடித்த காட்சிகளை முதலில் சென்னையில் படம்பிடித்தனர். நான் வழக்கமாக ஷோபனாவை ஆன்டி என்று அழைப்பேன். அவர் மூத்த நடிகை. ஒன்றாக நடிக்கும்போது எப்படி அழைப்பது என்று தவித்தேன். அவர் என்னிடம் ரொம்ப பிரண்ட்லியாக பழகினார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் எல்லாம் தமாஷ் செய்து சிரித்துக்கொண்டே இருப்பார்.
நடிகர் துல்கர் சல்மானுக்கும், தயாரிப்பாளர் துல்கர் சல்மானுக்கும் இடையே என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
அவர் எனக்கு இரண்டு விதமானவராக தெரியவில்லை. அவர் திட்டமிட்டு சிறந்த தயாரிப்பாளராக செயல்பட்டார். துல்கரை சிறுவயதில் இருந்தே தெரியும் என்றாலும் அடிக்கடி பார்த்ததில்லை. அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின்பு வரனை ஆவசியமுண்டு பூஜையில்தான் முதல்முறையாக பார்த்தேன். இது மலையாளத்தில் எனக்கு முதல் படம் என்பதால் டென்ஷனாக இருந்தேன். அதிலும் பிரியதர்ஷன்- லிசியின் மகள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ‘ஷாட் ரெடி’ என்று சொன்னதும் எனது இதயதுடிப்பு அதிகரிப்பதுபோல் இருக்கும். அப்போது துல்கர்தான் என்னை இயல்புநிலைக்கு கொண்டு வருவார். ‘ஏழு வருடங்களுக்கு முன்பு இதே மனநெருக்கடியைதான் நானும் அனுபவித்தேன். உன் அவஸ்தையை நானும் அறிகிறேன். டென்ஷனில் இருந்து அகன்று, நடிப்பில் மட்டும் கவனத்தை செலுத்து’ என்று நம்பிக்கையூட்டுவார். அந்த வார்த்தைகள் எனக்கு அதிக சக்தியை தந்தது.
உங்கள் தந்தை டைரக்டு செய்த ‘குஞ்சாலி மரைக்காயர்’ சினிமாவில் ஏற்கனவே நடித் திருந்தீர்கள் அல்லவா?
அதில் நான் ‘கெஸ்ட் ரோலில்’தான் நடித்தேன். மோகன்லாலின் மகன் பிரணவ்வுடன் ஒரு பாட்டில் தோன்றினேன். நானும், அவனும் சிறுவயதில் இருந்தே சண்டைபோட்டுக்கொண்டிருப்போம். அதனால் அவனோடு நடிக்கும்போது எனக்கு சிரிப்பு வந்துவிடும் என நினைத்து பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் இல்லை. எனது தந்தை இயக்கத்தில் நடித்தது எனக்கு அதிக பயத்தை உருவாக்கிய அனுபவமாக இருந்தது. இனியும் அவரது படம் ஒன்றில் நடிக்கவேண்டும் என்று என்னை அழைத்தால் நான் டென்ஷனிலே செத்துப்போய்விடுவேன். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்பாவும் என்னை போன்றுதான் டென்ஷனாக இருந்தார். பல மொழிகளில் ஏராளமான படங்களை அவர் டைரக்டு செய்த பின்பும் என்னை இயக்கியபோது டென்ஷனானதை நான் கண்டேன். என் அப்பாவின் டென்ஷன் திரை உலகில் எல்லோருக்கும் தெரிந்ததுதானே..!
அம்மா லிசியுடன் விளம்பர படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
அந்த விளம்பர படத்திற்கு ஒப்பந்தமானபோது எனக்கு மணப்பெண் தோற்றம் என்று கூறினார்கள். அம்மா கதாபாத்திரத்திற்கு இன்னொருவர் வருவார் என்று மட்டும் சொன்னார்கள். ஷூட்டிங்குக்கு முந்தைய நாள் என்னிடம் அம்மா, ‘உன்னோடு நடிக்க இருப்பது யார் தெரியுமா?’ என்று கேட்டார். நான் தெரியாது என்றதும், அவரே அம்மாவாக என்னுடன் நடிக்க இருக்கும் ரகசியத்தை சொன்னார். அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவர் கேமரா முன்னால் வருவதை முழுமையாக தவிர்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தேவையில்லாமல் ஒரு போட்டோவுக்குகூட போஸ் கொடுக்க மாட்டார். அப்படிப்பட்டவர் எப்படி விளம்பர படத்தில் நடிக்க சம்மதித்தார் என்பதுதான் என் அதிர்ச்சிக்கு காரணம். என்னோடு விளம்பர படத்தில் தோன்றவேண்டும் என்று ஆசைப்பட்டதால்தான், அம்மா அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது எனக்கு தெரியவந்தது.
அந்த விளம்பரத்தில் மகளின் திருமண கோலத்தைப் பார்த்து அம்மா ஆனந்தகண்ணீர் வடிக்கும் குளோசப் காட்சி ஒன்று உண்டு. கிளிசரின் பயன்படுத்தி அம்மா அழும் காட்சியை படமாக்கிவிட்டுதான், நான் மணப்பெண்ணாகும் காட்சியை எடுக்கவந்தார்கள். நான் தயாராகி மணப்பெண் அலங்காரத்தில் அப்படியே நடந்துவந்தபோது அம்மாவின் கண்களை பார்த்தேன். அவரது கண்கள் நிறைந்திருந்தது. ‘நீ முதலிலே இந்த கோலத்தில் வந்திருந்தால் நான் இயற்கையாகவே அழுதிருப்பேனே..’ என்றார். அதை கேட்டதும் என் கண்களிலும் கண்ணீர் சூழ்ந்துவிட்டது.
உங்களுக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கவும், ‘மணமகன் தேவை’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டியதிருக்குமா?
அத்தகைய விளம்பரம் தேவைப்படாது. நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். காதலிக்கும் விஷயத்தில் நான் அதிக சினிமாத்தனத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கான ஆளைபார்க்கும்போது என் இதயத்தில் தீப்பொறி பறக்கும் என்று நான் நம்புகிறேன்.