வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக, டிரம்ப், சமீப காலங்களில் 2-வது முறையாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 36 மணி நேர சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் தனது பேச்சின் நடுவே, இந்திய பிரதமர் மிகப்பெரும் தலைவர் அனைவருக்கும் அவரை பிடிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு அவர் மிகவும் கடுமையானவர் என்று குறிப்பிட்டார்.
டிரம்ப் குறிப்பிடுகையில், “ இந்தியா – அமெரிக்கா இடையே மிகவும் விரிவான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும். அமெரிக்க ஏற்றுமதிக்கு மிகப்பெரும் சந்தையாக இந்தியா உள்ளது. ஏற்றுமதியில் இந்தியாவுக்கு மிகப்பெரும் சந்தையாக அமெரிக்காவும் இருக்கிறது.
எனவே, வலுவான அமெரிக்கா இந்தியாவுக்கு சிறந்தது. விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். தற்போது இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரதமர் மோடி, பேச்சுவார்த்தைக்கு மிகவும் கடினமானவர் “ என்றார். வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக 2-வது முறையாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.