´மனித உரிமை மீறல்களுக்கு தேசிய இறைமை ஒரு போர்வையாக இருக்க முடி யாது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் நாடுகளையும் சமூகங்களையும் வலுப்படுத்துகின்றது. அதுவே, இறைமையையும் வலுப்படுத்துகின்றது என ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரனியோ கட்டரஸ், ஜெனிவாவில் தற்போது நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகுமென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்த அவரது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தேசிய இறைமை என்ற போர்வையின் கீழ் மனித உரிமை மீறல்கள் அவ்வப்போது உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதனை நமது நாட்டிலுள்ள இனவாத அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன.
சிறுபான்மை சமூகங்களைத் திட்ட மிட்ட முறையில் நசுக்கி ஒடுக்கவேண்டும் என்ற எண்ண வெளிப்பாடு உத்வேகம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஐ.நா. மன்றில் இந்த குரல் முன்வைக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
மேலும் அங்கு அவர் முன்வைத்துள்ள மற்றொரு கருத்தும் முக்கியத்துவம் பெறுகின்றது. அதாவது, ´உலக அரங்கில் பதகளிப்புகளை தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த வெளியை அதிகரிப்பதன் மூலம் அனுகூலங்களைப்பெற முயற்சிக்கப்படுகின்றது. வக்கிரமான அரசியல் கணக்கீடு இறுகப் பற்றிப்பிடித்துள்ளது. வாக்குகளைப் பெருக்குவதற்காக மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன´ என்பதையும் அவர் சுட்டிகாட்டி உள்ளமை நமது நாட்டிலுள்ள சமகால அரசியல் நிலைமையை படம் பிடித்து காட்டுவதுபோல் அமைந்துள்ளது.
எனவே, நம் நாட்டிலுள்ள சமகால அரசியல் தளத்தில் ஒரு தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நாம், வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் சூட்சுமங்களையும் காய்நகர்தல்களையும் தெளிவுபடத் தெரிந்து கொள்ளவேண்டும். என தெரிவித்துள்ளார்.