வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, சினிமா, ‘பைான்சியர்’ அன்புச்செழியன், நடிகர் விஜய் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டனரா என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
மதுரையை சேர்ந்தவர் அன்புச்செழியின். இவர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில், ‘ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன்’ உட்பட, சில படங்களை தயாரித்துள்ளார். மேலும், சினிமா படங்கள் தயாரிக்க, பைனான்ஸ் செய்வது, இவரது முழு நேர தொழில். சில தினங்களுக்கு முன், வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை, தி.நகர் மற்றும் மதுரையில் உள்ள, அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக, 77 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல, நடிகர் விஜய் நடித்த, ‘பிகில்’ படத்தை தயாரித்த, ஏ.ஜி.எஸ்., நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடு மற்றும் அலுவலங்களிலும் சோதனை நடத்தினர். மேலும், அன்புச்செழியன், நடிகர் விஜய் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். அத்துடன், அகோரத்தின் மகளிடமும் விசாரித்தனர்.
இந்நிலையில், வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கியுள்ள, அன்புச்செழியன் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர். அவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஆவணங்களை பெற்று, ஆய்வு செய்து வருகின்றனர்.