டெல்லி கலவரங்கள் முழுமையான செய்திகளின் தொகுப்பு.. 26.02.2020

டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடுபவர் பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

‘டெல்லி கலவரத்தில் மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பார்க்கக்கூடாது.

பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ராவாக இருந்தால்கூட தவறு செய்திருந்தால், மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியிருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீருடையில் வந்த காவலர்களை இவ்வாறு நடத்தியிருக்கிறார்கள் என்றால், சாதாரண மக்களை எவ்வாறு நடத்துவார்கள். இது என்ன மாதிரியான போராட்டம். மக்களை ஆத்திரமூட்டும் பேச்சுகள் பாஜக சார்பில் யார் பேசியிருந்தாலும் அல்லது ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள். ஆதலால், மக்களைத் தூண்டிவிடுவோர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் எனப் பார்க்கக்கூடாது. யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைக்கு நான் ஆதரவு தருகிறேன்”.
இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

——-

டெல்லியில் நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸார் தலையிட்டுத் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் நேற்றும் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் ஒருதலைமைக் காவலர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், 3-வது நாளாகவும் கலவரம் தொடர்ந்தது. போலீஸார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கட்டுப்படுத்தினாலும் ஆங்காங்கே தொடர்ந்தது. கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்தது. 150 போலீஸாருக்கும் மேலாகக் காயமடைந்தனர்.

இதற்கிடையே டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் கலவரத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மக்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் இன்று சந்தித்தனர்.

காயமடைந்தவர்களைச் சந்தித்த பின் முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், ” கலவரத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும், துப்பாக்கி குண்டால் காயமடைந்தவர்களையும் சந்தித்துப் பேசினேன். தரமான சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கலவரத்தைத் தடுத்து நிறுத்த முடியாததுதான் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. அனைவரிடம் கேட்பது என்னவென்றால், தயவு செய்து வன்முறையை நிறுத்துங்கள். இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கலவரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துப் பேசியுள்ளேன். போதுமான அளவு படைகளை அனுப்பக் கோரியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

——–

குறுகிய நோக்கு உள்ளவர்களையும், உணர்வற்றவர்களையும் ஆட்சியில் அமரவைத்தமைக்கான விலையை மக்கள் கொடுக்கிறார்கள் என்று டெல்லி கலவரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே வடகிழக்கு டெல்லி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே தொடங்கிய கலவரம் இன்று மூன்றாவது நாளாக நீடித்தது.

இந்தக் கலவரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தக் கலவரத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். ட்விட்டரில் அவர் விடுத்த செய்தியில், “டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த கலவரத்தில் தலைமைக் காவலர் உள்ளிட்ட பலர் உயிரிழந்தது கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்தக் கலவரத்துக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

உணர்வற்றவர்களையும், குறுகிய நோக்கம் உள்ள தலைவர்களையும் ஆட்சியில் அமரவைத்தமைக்கு மக்கள் விலை கொடுத்து வருகின்றனர்.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் எந்தவிதமான திருத்தமும் இல்லாமல்தான் இந்தியா வாழ்ந்து வந்தது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் அவசியம் என்ன? அந்தத் திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

இப்போதுகூட ஒன்றும் தாமதம் ஏற்படவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் குரல்களைக் கேட்டறிந்து, சிஏஏ சட்டத்தை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் சமூகத்தில் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தும் என்று எங்கள் கட்சி எச்சரித்தது. உடனடியாக அந்தச் சட்டத்தை ரத்து செய்யுங்கள். எங்கள் எச்சரிக்கைகள் செவித்திறன் அற்றவர்கள் காதில் விழுந்துள்ளது” எனக் கண்டித்துள்ளார்.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதீன் ஒவைசி கூறுகையில், “டெல்லியில் நடந்துவரும் கலவரம் கண்டிக்கத்தக்கது. வெளிநாட்டிலிருந்து அதிபர் டெல்லி வந்துள்ளபோது, அங்கு வன்முறை ஏற்படுவது நாட்டுக்கே அவமானம்.

பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா நீங்கள் வைத்திருக்கும் போலீஸாரைப் பாருங்கள். போராட்டக்காரர்கள் மீது அவர்கள் கல்வீசுகிறார்கள். இந்தக் கலவரத்தைக் கண்டிக்கிறேன். கலவரத்தைக் கட்டுப்படுத்த அமித் ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

——

டெல்லியில் நடந்த வகுப்புவாதக் கலவரத்தில் 21 பேர் பலியானதற்கு மத்திய அரசும், டெல்லி அரசும் பொறுப்பேற்க வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ராகுல் காந்தி வெளிநாடு சென்றுவிட்டதால், அவர் இதில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் டெல்லி வன்முறை குறித்தும், டெல்லியில் அமைதி கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:

”டெல்லியில் நடந்த வகுப்புவாத மோதலில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளார்கள். இந்தக் கலவரத்துக்குப் பின்னணியிலும், உயிர்ப்பலிக்குப் பின்னணியிலும் ஏதோ சதி இருக்கிறது என்று கருதுகிறோம்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது சதி இருப்பதைக் கண்டுபிடித்தோம். மக்கள் மத்தியில் பாஜக தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாகப் பேசி சதி செய்தார்கள்.

இந்தக் கலவரத்துக்கு மத்திய அரசு, டெல்லி அரசு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினா செய்யவேண்டும்.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைதியை நிலைநாட்டத் தவறிவிட்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, வன்முறையைத் தூண்டும் வகையில் சர்ச்சைக்குரியவாறு பேசியுள்ளார். டெல்லியில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி ஆலோசித்தது. டெல்லியில் சூழல் மிகவும் மோசமாக இருப்பதால், அவசரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

ஒவ்வொரு வார்டிலும் அமைதிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மக்களிடம் பேச வேண்டும். தேவையான அளவுக்கு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டு அமைதியை நிலைநாட்டி இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாற்றி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் எனக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.

——-

பிரதமர் மோடி, அமைதியையும் சகோதுரத்துவத்தையும் பராமரிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள், போலீஸார் காயமடைந்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாக அதிபர் ட்ரம்ப் இந்திய வருகையில் அவருடன் இருந்த பிரதமர் மோடி, கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் டெல்லி கலவரம் தொடர்பாக இன்று ட்விட்டரில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், “டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரம் தொடர்பாகவும், அங்கு நிலவும் சூழல் குறித்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அமைதியும், இயல்பு நிலையும் திரும்ப போலீஸார் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியும், ஒருமைப்பாடும் நமது பண்பாட்டின் மையக் கருத்துகள். டெல்லியில் உள்ள அனைத்து சகோதர, சகோதரர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், அமைதியையும் சகோதரத்துவத்தையும் அனைத்து நேரமும் பராமரிக்க வேண்டும்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

——-

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. பாஜக தலைவர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா சிஏஏ ஆதரவாளர்களிடையே பேசிய பேச்சு தொடர்பான வீடியோவை நீதிமன்ற அறையில் ஒளிபரப்பி நீதிபதிகள் பார்த்தபின் இந்த அறிவுரை வழங்கப்பட்டது.

டெல்லி கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். அதில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக வன்முறையாளர்கள் மீதும், வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

——-

டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி கலவரம் தொடர்பான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் அவற்றை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் ஷாகின் பாக்கில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் மனுவை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஷாகின் பாக்கில் போராடி வரும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோஸப் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜோஸப், கவுல் இருவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு போலீஸாருக்கும், மத்திய அரசுக்கும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நீதிபதி ஜோஸப் கூறுகையில், “டெல்லியில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். டெல்லி போலீஸார் யாரிடமும் அனுமதிக்காக காத்திருக்காமல் சட்டத்தின் அடிப்படையில் கடமையைச் செய்திருக்க வேண்டும். டெல்லி போலீஸார் கடமையைச் செய்ய அனுமதிக்க மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதான் கலவரம் பெரிதாகக் காரணமாகியுள்ளது.

நான் சட்டத்துக்கு உண்மையுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைத்து மிகவும் வேதனையாக இருக்கிறது. பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை போலீஸார் நடைமுறைப்படுத்தும்போது, இன்னும் திறமையாகவும், கடமையுணர்வுடன் செயல்பட முடியும்.

டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள். வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் ஏற்படும் முன், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது டெல்லி போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.

கலவரத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் டெல்லி போலீஸார் யாரிடமும் அனுமதிக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டிருக்க வேண்டும். வெறுப்புப் பேச்சு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

அரசியல் கட்சிகளும், மற்ற அமைப்புகளும் சேர்ந்து டெல்லி நகரின் பதற்றத்தைத் தணிக்க வேண்டும். சமூகத்தில் இதுபோன்ற நடத்தை, சம்பவங்கள் நடக்கக்கூடாது. டெல்லியின் பதற்றத்தைத் தணிக்க அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் முயல வேண்டும். ஆரோக்கியமான விவாதம் மட்டுமே இருக்கலாம். இதுபோன்ற வன்முறை கூடாது.

இங்கிலாந்து, அமெரிக்காவில் போலீஸாரைப் பாருங்கள். அங்கு ஏதாவது தவறு நடந்தால், யாரிடமும் கேட்காமல் சட்டத்தின்படி செயல்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.

அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. டெல்லி போலீஸார் தொடர்பாகக் கடுமையான கருத்துகள் தெரிவித்தால் அவர்கள் மனவலிமையைக் குலைத்துவிடும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிப்பதால் மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் ஷாகின் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்தும் மனு குறித்து நீதிபதி ஜோஸப் கூறுகையில், “இப்போதுள்ள சூழலில் அந்த மனு மீது எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதற்கான ஆரோக்கியமான சூழல் இல்லை. இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். நடந்த சம்பவங்கள் அனைத்தும் துரதிர்ஷ்டமானவை. அவை நடந்திருக்கக் கூடாது. ஷாகின் பாக் விவகாரத்தில் நிவாரணம் பெறத் தனியாக மனுத்தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்தனர்.

Related posts