குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
நேற்று வரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் இன்று உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
வன்முறை நடந்த மத்திய மற்றும் வடகிழக்கு டெல்லி பகுதிகளில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து வன்முறை தணிந்துள்ளது. இன்று காலையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெறவில்லை. பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ள அதேசமயம், அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளில் வன்முறை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.