இலங்கையில் சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பதற்கு அதிகபட்ச முன்னுரிமையை வழங்குவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்குமிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டது.
2030ஆம் ஆண்டாகும்போது சிறுவர் மந்தபோசணையை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகளினதும் உலக வங்கியினதும் அவசர அழைப்புக்கு செவிமடுப்பதற்கு தனது காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் உள்ளது குறித்து ஜனாதிபதிக்கு இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹெனா சிங்கர் நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம், உலக சிறுவர் நிதியம், உலக சிறுவர் ஸ்தாபனம், சர்வதேச உணவு நிகழ்ச்சித்திட்டம், ஐ.நா அபிவிருத்தி நிதியம், உலக வங்கி, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியைசந்தித்தனர்.
தற்கால வேலைப்பழு நிறைந்த வாழ்க்கை அமைப்பின் காரணமாக மக்கள் பாரம்பரிய உணவுகளிலிருந்து விலகி உடனடி குறுகிய உணவு பழக்கத்திற்கு மாறியுள்ளனர். அதிகளவு சீனி அடங்கியுள்ள போசணை குறைந்த இந்த உணவுப் பழக்கத்தின்மூலம் சிறுவர் மந்தபோசணை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சிறுவர் மந்தபோசணையை குறைப்பதற்கு இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும் அவை எவ்வளவு தூரம் பயனுறுதி வாய்ந்தவை என்பது பிரச்சினைக்குரியதாகும் என்று உலக வங்கி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இலங்கை மந்தபோசணைக்கு அடிப்படைக் காரணமான வறுமையை ஒழிப்பதற்கு தேவையான அம்சமாகும் என்றும் எமது பொருளாதார திட்டங்களின் அடிப்படையாக இருப்பது மக்கள்மைய பொருளாதார மாதிரியாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது எமது இலக்காகும். அதற்காக நாம் தற்போது பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்புகளை வழங்குதல், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வறிய குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 1/3பகுதியினர் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இத்துறையை முன்னேற்றுவதற்கு பிரதிநிதிகளின் உதவியை கோரிய ஜனாதிபதி, விவசாயத்துறையின் வினைத்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் வறிய மக்களின் பொருளாதார மட்டத்தை உயர்த்துவதன் மூலம் பிள்ளைகளுக்கு சிறந்த போசணையை பெற்றுக்கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார்.
பிள்ளைகளின் போசணை தொடர்பில் கருத்திற்கொள்ளும்போது முன்னேற்றப்பட வேண்டிய மற்றுமொரு துறையாக மீன்பிடி மற்றும் பசும்பால் உற்பத்தி கைத்தொழிலை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பசும்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு உதவுமாறும் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார். சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்கு இலங்கை பாரியளவு செலவு செய்கின்றது. சிறந்த மருந்துப் பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு தற்போது நாம் முகங்கொடுத்துள்ளோம். கிராமிய சுகாதார சேவைகளையும் முன்னேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.
——-
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலின் ஊடாக களமிறங்க கூடும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ராகமையில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது ரணில் விக்கிரமசிங்க மௌனமாக இருப்பது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.