டெல்லியில் நடைபெறும் கலவரத்தை மத்திய அரசும், மாநில அரசும் மெளன பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் சோனியா காந்தி கூறியதாவது:
‘‘டெல்லியில் நடைபெறும் கலவரத்தை மத்திய அரசும், மாநில அரசும் மெளன பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் உயிரையும், உடமையையும் இழந்து தவிக்கின்றனர். வணிகர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்ததை சந்தித்து மனு அளித்தோம். டெல்லி மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியறுத்தினோம்.
டெல்லியில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் கூறினோம்’’ எனக் கூறினார்.