எமது நியாயங்களை உலகுக்கு ஆணித்தரமாக முன்வைப்போம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து தற்போது விலகியதன் மூலம் எமது தரப்பு நியாயங்களை சர்வதேச சமூகத்திடம் ஆணித்தரமாக முன்வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், பாதுகாப்புச் சபையினூடாக கொண்டுவந்தாலும் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இணை அனுசரணையிலிருந்து ஒதுங்கியது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
நாட்டை மீட்ட படைவீரர்கள் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் கடந்த அரசு ஜெனீவா யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியது. உலகில் இவ்வாறு தமது நாட்டை காட்டிக் கொடுத்த முதல் நாடு இலங்கை தான். அதனை மங்கள சமரவீர செய்துவைத்தார்.
2009 இல் யுத்தம் நிறைவடைந்த பின்னர் எமது அரசு நல்லிணக்க ஆணைக்குழு அமைத்தது. இது தவிர வேறு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு யுத்தத்தின் பின்னரான முன்னெடுப்புகள் இடம்பெற்றன. உள்ளக பொறிமுறையின் கீழ் எமக்கு தனித்துவமான முறைமை பின்பற்றப்பட்டது. நாட்டின் நீதித்துறையினூடாக ஆவண செய்யப்பட்டன. சர்வதேச தலையீடு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் ஆரம்பம் முதல் இருந்தோம்.
ஆனால் 30 வருட கால யுத்தத்தில் கடைசி இரண்டு மூன்று வாரங்கள் குறித்தே பேசப்பட்டது.போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தலதா மாளிகை, காத்தான்குடி பள்ளி தாக்குதல் குறித்து எதுவும் பேசப்படவில்லை.
3 இலட்சம் மக்களை மீள்குடியேற்றி 12 ஆயிரம் பேர்வரை புனர்வாழ்வளித்து நல்லிணக்கத்திற்கு செயற்பட்ட நிலையில் இறுதி வாரங்கள் குறித்து மாத்திரம் இன்று வரை பதில் சொல்ல வேண்டி ஏற்பட்டிருக்கிறது.
ஜெனீவா பிரேரணைக்கான இணை அனுசரணையானது முழு நாட்டு மக்களினதும் கன்னத்தில் அடித்தது போன்ற செயலாகும். இந்நிலையிலேயே மக்களின் வேண்டுகோளுக்கும் நாட்டின் நலனுக்குமாக இணை அனுசரணையில் இருந்து விலக எமது அரசு முன்னுரிமை வழங்கியது. அதனாலே இது தொடர்பில் முடிவு எடுத்து நாட்டு மக்களுக்கான எமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளோம்.
இணை அனுசரணையிலிருந்து வாபஸ் பெற்ற நிலையில் எமது தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக முன்வைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இணை அனுசரணை வழங்கியது அரசியலமைப்பிற்கு முரண் என திலக் மாரப்பன கூட கூறியிருந்தார். தற்போதைய நிலையில் சர்வதேச சமூகத்தின் முன் தைரியமாக உண்மை நிலைமையை கூற வாய்ப்பு உருவாகியுள்ளது.
யுத்த காலத்தில் நாம் தவறு செய்ததாகவும் அப்பாவி மக்களை கொலை செய்ததாகவும் நாமாக சர்வதேச சமூகத்திடம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். டயஸ் போராக்களின் அழுத்தத்தின் காரணமாக இந்த பொய்யை கடந்த அரசு ஏற்றுக் கெண்டது. இந்த பொய்யில் இருந்து மீண்டு உண்மையை நிலைநிறுத்த வேண்டும்.
2005/6 ல் புலிகளுடன் பேச்சு நடத்த முன்வந்தோம். ஆனால் தங்களை பலப்படுத்தவே அவர்கள் இதனை பயன்படுத்தினார்கள். இந்நிலையிலேயே இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இணை அனுசரணையிலிருந்து ஒதுங்கினாலும் பொறுப்புக் கூறலையும் நல்லிணக்கத்தையும் தொடர்வோம். எமது நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் சகல முன்னெடுப்புகளும் இடம்பெறும். உள்ளக பொறிமுறையின் கீழ் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் கீழ் தேவையான முன்னெடுப்புக்களை செய்வதாக அறிவித்திருக்கிறோம். இதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று உகந்த வகையில் அமைக்கப்படும். தேர்தலின் பின்னர் துரிதமாக இந்த ஆணைக்குழு நிறுவப்படும். கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை ஆராய்ந்து தொடரும் வகையில் இந்த முன்னெடுப்பு அமையும் என்றார்.
கேள்வி : இணை அனுசரணையிலிருந்து விலகியதால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாதா?
பதில் : கத்தியை கழுத்தில் வைப்பதற்காக அவர்கள் சொல்வதை செய்வதா? எமது தரப்பு நியாயத்தை முன்வைத்து முன்னோக்கி செல்வதா? என நாம் தீர்மானிக்க வேண்டும். அதனை தான் செய்துள்ளோம். எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு முன்வைத்துள்ளோம். மனித உரிமை பேரவைக்கு எம்மீது தடை உத்தரவிட முடியாது. பாதுகாப்பு சபையில் யோசனை முன்வைத்தே அதனை நிறைவேற்ற வேண்டும். ஆனால் பாதுகாப்பு சபையில் எமக்கு ஆதரவான நாடுகள் இருக்கின்றன. ஏனைய நாடுகளுடனும் பேச்சு நடத்த முடியும் என்றார்.
கேள்வி : நாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது தொடர்பில் மங்கள சமரவீரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா ?
பதில் : நாட்டின் நீதிக் கட்டமைப்பிற்குட்பட்டதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது.
கேள்வி : தேர்தலுக்காக அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா?
பதில்: ஜனாதிபதித் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.இதில் வேறு நோக்கம் கிடையாது.
ஷம்ஸ் பாஹிம்