இந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும் இன்னும் மீளவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இயக்குநர் ஷங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியில் இருந்தும், வேதனையில் இருந்தும், மன உளைச்சலில் இருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன். மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன் என கூறி உள்ளார்.