தபசுகால சிந்தனை. 1
தமது இரத்தத்தால் நம்மை தேவனுடன் ஒப்பரவாக்கிய இயேசு.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்கா பிரார்த்திப்போம்.
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புர வாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலேசியர் 1:20.
தமிழர்களாகிய நாம் அனைவரும் இன்றைய இந்த நற்சிந்தனையை மிகவும் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். இலங்கையில் இரு இனங்களுக்கு மத்தியிலும், தமிழர்களுக்கு மத்தியிலும் ஏற்பட்ட பிரிவினை என்னவென்று ஆராய்ந்தும், அதனை தீர்க்கக்கூடிய நிலைமைகளும் செயற்பாடுகளும் எவ்வளவு தூரம் எம்மால் தாமதிக் கப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.
மனிதர்கள் ஆகிய நாம் பகைமைகளை மறந்து மனித நேயத்தை வெளிப்படுத்தி அமைதியை உருவாக்க முயற்சி எடுக்க முடியவில்லை. காரணம் என்னவென்று யாவரும் நன்கு அறிந் திருப்போம். ஆனால் பாவம்செய்து தேவமகிமையை இழந்து, தேவனுடன் உள்ள தொடர்பை இழந்து, தேவனுக்கு எதிராளியாகிய எம்மை இயேசு, தமது இரத்தத் தினால் எமது பாவங்களைக் கழுவி, பரிசுத்தப்படுத்தி மீண்டுமாக தேவனுடன் ஓர் உன்னத தொடர்பை ஏற்படுத்தினார்.
இதனை நாம் மேலே வாசித்தோம். பிதாவாகிய தேவன் தமது குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பி, பாவ நிவாரணபலியாக சிலுவை மரணத்தின் மூலம் ஒப்புக்கொடுத்து மனுக்குலத்தை பாவசாபங்களில் இருந்துமீட்டு, மீண்டும் தம்முடன் (தேவனுடன்) ஒப்பரவாக்கினார்.
இதனை நாம் 2கொரிந்தியர்5:18-19இல் காணலாம். அவர், இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களை (மனுக்குலத்தை) தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை (உண்மையை –சத்தியத்தை) எங்களிடத்தில் ஓப்புவித்தார்.
ஒருதடவை மனிதன் இ.தளத்தில் ஓர் வேடிக்கையான ஒளிப்படத்தை பார்த்தேன். இந்தியாவில் தோசம் நீங்க மாட்டைத் திருமணம் செய்த இளைஞரைப் பற்றியது. புpதாவாகிய தேவன் இயேசுமூலம் மக்களின் பாவங்களை, சாபங்களை, தோசங்கள நீக்கி விடுதலை தருகிறார் என்பதை இன்று அறிய மனமற்ற மக்கள், தங்களின் தோசம் நீங்க இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். இது எவ்வளவு வேதனைக்குரியது மட்டுமல்ல வேடிக்கையானதும்;;கூட. இன்னும்பல வேடிக்கையான சம்பவங்கள் இன்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. எமது நாட்டில் இப்படி நடவாததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். தேவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அதேபோல ஒருதடவை பத்திரிகையில் வாசித்த ஓர் சம்பவமும் நினைவுக்கு வருகிறது. ஒருகுடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டையும் சமாதான முமாக பலவருடங்கள் கழிந்தது. இதற்கிடையில் ஆறுபிள்ளைகளை பெற்றுக் கொண்டனர். திரும்பவும் பிரிவும் இணைவுமாக இருந்தனர். 7வது குழந்தையும் பிறந்தது. அப்போது ஜோதிடர்கள் உங்களுக்கு நல்லகாலம் பிறந்து விட்டது என்று கூறினர். சிறிது காலத்தின் பின்னர் ஏழாவது குழந்தை இறந்து விட்டது. அப்போது பெற்றோர் உணர்ந்தனர், குழந்தையின் மரணத்திற்கு பெற்றோராகிய நாம் காரணம் என்று. பிற்பாடு இனி நாம் பிரிவதில்லை என்று உறுதிபூண்டனர். சுருங்கக் கூறின் குழந்தையின் மரணம் குடும்பத்தை சேர்த்து வைத்தது எனலாம்.
ஆனால் தேவனின் வார்த்தைக்கு செவிசாய்த்து கீழ்படியாமையால் தேவனை விட்டு பிரிந்துபோன மனிதனை தேவனோடு இணைக்க எந்தவொரு மனிதனாலும் முடிய வில்லை. எந்தவொரு முயற்சியும் சரிவரவில்லை. ஏன் தெரியுமா? பாவம். அது அவ்வளவு கொடியது. பாம்பைக்காட்டிலும் விசமுள்ளது. அது தேவனையும் மனிதனையும் பிரித்தது. அந்த பாவத்தினால் ஏற்பட்ட பிரிவை நீக்கிச்சரிப்படுத்தி தேவனோடு மக்களை ஒப்பரவாக்க இரத்தம் சிந்தப்பட வேண்டியிருந்தது. இப்பொழுது உணர்ந்திருப்பீர்கள் பாவம் எவ்வளவு கொடியது என்று.
வேதம் இவ்வாறு கூறுகிறது. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் (கவலைகளை) சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்மு டைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் (தீமைகளுக்காக) அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் (கொண்டுவரும்) ஆக்கினை (உத்தரவு) அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (விடுதலை அடைகிறோம்).
கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:4-5,10.
அருமையான அலைகள் வாசகநேயர்களே, நமது பிள்ளையும் சாகவேண்டாம். நாமும் எதையும் இழக்கவும் வேண்டாம். இதோ தேவன் தமது ஒரேபேறான குமாரனின் இரத்தத்தை தாமே எமக்காக பலியாக ஒப்புக்கொடுத்து நமக்கு மன்னிப்பையும், விடுதலையையும் அளித்துள்ளார். தேவன் நமக்காக தம்மை விட்டுக் கொடுத்தார். தம்மையே கொடுத்து விட்டார். நாமும் நம்மை தேவனுக்கு விட்டுக் கொடுப்போமா?
நாம் எம்மை விட்டுக்கொடுத்து வாழும்போது, சிதறுண்ட ஆடுகளைப் போலிருந் தீர்கள். இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியு மானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள் (1பேதுரு 2;:25) என்ற இந்த தேவனின் பாதுகாப்பை உங்களது வாழ்க்கையில் அடைந்து கொள்ளலாம். அப்போது அவர் உங்களை எந்த தீமைகளும் அணுகாத வண்ணம் காத்துக் கொள்வார். இந்த அனுபவத்தை நீங்கள், உங்கள் வாழ்வில் அடைந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த தேவனின் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றி அடைந்து கொள்ள என்னுடன் சேர்ந்து கீழ்வரும் ஜெபத்தை தேவனிடம் ஒப்புவி.
அன்பின் பரமபிதாவே, நான் நித்திய ஜீவனைப் பெறும்படியாக இயேசுவை சிலுவைமரணம் வரை ஒப்புக்கொடுத்தீரே, நன்றி அப்பா. அந்த சிலுவை மரணம் உம்மைவிட்டு பிரிந்திருந்த என்னையும் உம்மோடு ஒப்பரவாக்கியதற்காக நன்றி. அந்த அன்பை நான் மறக்காமல் வாழவும், நன்றியுள்ள மனதுடன் எப்போதும் உம்முடன் வாழ உதவி செய்து என்னையும் எனது குடும்பத்தையும் காத்துக் கொள்ளும் படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் நல்லபிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!