ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பாதுகாப்பு படை அதிகாரிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
அல் கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி அமெரிக்காவின் பென்டகன் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையம் மீது விமானங்களை மோத செய்து அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் ஒன்றுமறியாத 3 ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏறக்குறைய ரூ.72 ஆயிரம் கோடி நிர்மூலமாக்கப்பட்டன.
இந்த தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அப்போது ஆட்சியில் இருந்த தலீபான்கள் புகலிடம் அளித்தனர். இதனால் கடந்த 2001ம் ஆண்டு, அக்டோபர் 7ந்தேதி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலீபான்களை தூக்கி எறிந்து, மக்களாட்சியை மலர வைத்தது.
அதை தொடர்ந்து அங்கு 19 ஆண்டுகளாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக 12 ஆயிரம் அமெரிக்க கூட்டுப்படை வீரர்கள் இருந்து வருகின்றனர்.
அந்த படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது. இதில் 2,400 அமெரிக்க படை வீரர்கள் பலியாகினர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர். 25 லட்சம் மக்கள், வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். 20 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பிய அமெரிக்கா பேச்சுவார்த்தை முயற்சியை தொடங்கியது. எனினும், பல முறை இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
இதன்பின்னர் கடந்த 29ந்தேதி அமெரிக்கா மற்றும் தலீபான்களுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்பின்பு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தலீபான் அமைப்புகளின் அரசியல் தலைவருடன் மிக நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடந்தது என கூறினார். இதனால் 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படைகள் வெளியேறும் என கூறப்பட்டது.
ஆனால், நேற்றிரவு தொடர்ச்சியாக தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் என 20 பேர் கொல்லப்பட்டனர். தலீபான் தீவிரவாதிகளின் அரசியல் தலைவருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசிய சில மணிநேரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.