அமெரிக்காவில் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 81 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் சுமார் 3,198 பேர் பலியாகியுள்ளனர். 93,123 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 50,675 பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர்.

ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 92 ஆக அதிகரித்து இருந்தது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,822 ஆக அதிகரித்து இருந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனுடன், 591 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை இன்று 107 ஆக உயர்வடைந்து உள்ளது. வைரசுக்கு பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,513 ஆக அதிகரித்து உள்ளது.

இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் உறுதிப்படுத்தி உள்ளார். அந்நாட்டில் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டவையாக உள்ளன.

——–

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் ஏற்பட்டுள்ள உற்பத்தி மந்த நிலையால், உலக அளவில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள், வாகன மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகிய துறைகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள மந்த நிலை காரணமாக உலகாளவிய வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் சுமார் 25 ஆயிரம் கோடி (348 மில்லியன் டாலர் ) அளவுக்கு வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியன் ( 15.6 பில்லியன்), அமெரிக்கா (5.8 பில்லியன்), ஜப்பான் (5.2 பில்லியன்), தென்கொரியா (3.8 பில்லியன்), தைவான் (2.6 பில்லியன்), வியட்நாம் (2.3 பில்லியன்) போன்ற நாடுகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை வேதியியல் துறை (129 மில்லியன் டாலர்), ஜவுளி மற்றும் ஆடை (64 மில்லியன்), ஆட்டோமேட்டிவ் துறை (34 மில்லியன்), மின்னணு இயந்திரவியல் துறை (12 மில்லியன் டாலர் ) போன்ற துறைகளில் பாதிப்பு அதிகம் ஏற்படும் என ஐநாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

——-

கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். 90-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மேலும் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல், தென்கொரியாவில் 29 பேர் கொரோனா வைரசால் இறந்துள்ளனர். மேலும் 477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இதுவரை 4,812 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மந்திரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தானிலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஜப்பானில் 980 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். ஈரானில், 2,336 பேர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்ததால் சாவு எண்ணிக்கை 77 ஆக உயர்ந்து உள்ளது.

பிரான்சில், 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 191 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,056 ஆக உயர்ந்து உள்ளது. 89,527 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts