மிகப் பெரும் வன்முறைக் காட்சிகளை அமைத்து சமுதாயத்தை சீரழித்து வரும் சூர்யா கூட்டணி அடுத்து வரும் இன்னொரு மோசமான வன்முறை படம் அருவா.
சமுதாயத்தை வன்முறைக்குள் தள்ளும் இது போன்ற படங்களை பார்த்து இலங்கையில் பாமர இளையோர் வாளெடுத்து அலைகிறார்கள்.
எனவே தமிழக அரசும் சென்சாரும் கடும் நடவடிக்கை எடுத்து இத்தகைய படங்களை தடுக்க வேண்டும் என்ற நிலை என்று வருமோ தெரியவில்லை.
இது குறித்த தமிழக செய்தி வருமாறு..:
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன.
அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேசி வருகின்றனர். சூர்யா அண்ணன், தம்பி என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இருவருக்கும் நடக்கும் மோதலே படம் என்றும், கிராமத்து பின்னணியில் படத்தை எடுக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சூர்யா படத்துக்கு அருவா என்ற தலைப்பு வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே பெயரில் பாடலாசிரியர் ஏகாதசி படம் இயக்கி உள்ளார். இயக்குனர் தருண்கோபி தயாரித்துள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனாலும் பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகள் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஏகாதசி கூறும்போது, “அருவா என்ற பெயரில் நாங்கள் படம் எடுத்துள்ளோம். இதே பெயரை சூர்யா படத்துக்கு வைத்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தலைப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றார். இதனால் சூர்யா பட தலைப்பு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.