இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 10.03.2020 மதியம்

தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இன்று (10) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ள இலங்கைப் பிரஜைகள் 179 பேர் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 02 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் அவசியம் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள். இதற்கமைய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

——-

நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (10) பிற்பகல் குறித்த 06 பேரும் சட்டத்தரணி மூலமாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியமுல்லை ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரையில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

——-

தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இன்று (10) அதிகாலை நாட்டிற்கு விமானம் மூலம் வருகை தந்த மேலும் 24 பேர் பொலன்னறுவை, கந்தக்காடு இராணுவ முகாமில் உருவாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள அனைவரும் ஆண்கள் என்பதோடு, அவர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

——-

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான தனிமைப்படுத்தலுக்காக எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (10) தெரிவித்துள்ளது.

தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இந்நாட்டிற்கு வருகை தந்தோரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும் தெரிவித்தார்.

இத்தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார அமைச்சும் இராணுவமும் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

——

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்றையதினம் (10) தனிமைப்படுத்தும் மையங்களாக உருவாக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டுள்ளார்.

இத்தாலி, கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

இவர்களுக்கான இவ்வாறானதொரு நிலையம் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள அதேவேளை, மற்றுமொரு நிலையம் பொலன்னறுவை, வெலிகந்த, கந்தகாடுவ இராணுவ முகாமில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

——-

சமகி ஜனபல வேகயவை கூட்டணியாக உருவாக்க செயற்குழுவின் அனுமதி உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் விருப்பப்படியே என காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் தாளத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியை ஆட்டுவிப்பதாக அவர் தெரிவித்தார்.

பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த அவர், சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகயவின் கீழ் போட்டியிடுவதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் போட்டியிடுவதா? என கேள் எழுப்பியிருந்தார்.

அதற்கு அங்கிருந்தவர்களின் பெரும்பாலானோர், எந்த சின்னமாக இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கீழ் போட்டியிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,

´இது நியாயமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளது. ஒரு அநாகரீகமான காரியத்தைச் செய்துள்ளார்கள். சமகி ஜனபல வேகயவை உருவாக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. கூட்டணியின் தலைமைத்துவம், பிரதமர் வேட்பாளர் பதவி சஜித் பிரேமதாசவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டணின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை செயற்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் குழுவொன்றும் மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவொன்றுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இறுதியில் சமகி ஜனபல ​வேகயவின் யாப்பில் சிக்கல் காணப்படுவதாக தெரிவித்து, யானை சின்னம் தருகிறோம் அன்னம் சின்னம் தருகிறோம் என்று மூலையில் போடப்பட்டுள்ளது. இது அருவருப்பான செயல்´ என அவர் தெரிவித்தார்.

Related posts