ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேல் சாமி கும்பிட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஆசை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது நல்ல விசயம் என்றும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. 2021 ஆம் ஆண்டு தான் முதலமைச்சராக திட்டமிட்டுள்ளதாக நகைச்சுவையுடன் கூறிவிட்டு வடிவேலு சென்றார்.
——
வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சிம்புவை மிஷ்கின் சந்தித்து கதை சொன்னதாகவும், சிம்புவுக்கும் கதை பிடித்துப்போய் நடிக்க சம்மதம் சொல்லி இருப்பதாகவும், மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் படத்தில் நடிப்பார் என்றும் தகவல் பரவி உள்ளது.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் படத்துக்காக செலவிட்ட ரூ.10 கோடியை வடிவேலு ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தினர் ஷங்கர் படத்தை முடித்து கொடுக்கும்படி வடிவேலுவை நிர்ப்பந்தித்தனர். அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து வடிவேலு படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பட அதிபர் சங்கம் அறிவித்தது. இதனால் புதிய படங்களுக்கு வடிவேலுவை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவில்லை.
சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் சிம்பு படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் வடிவேலுக்கு எதிரான தடை நீக்கப்படவில்லை என்றனர்.