கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்பது தெரிந்திருந்தும் அதனை மறைத்தால், அத்தகைய நபர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் சட்டப் பிரிவு பணிப்பளார், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்தகைய நபர்களை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் மேலும் தெரிவித்தார்.
இன்றையதினம் (15) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறான தவறான பிரச்சாரங்களை மேற்கொண்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனிப்பட்ட ஒன்றுகூடல் தொடர்பில் பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலும், திருமணங்கள் போன்ற விடயங்களில் கடுமையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைக்கு உதவுவதற்காக, அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் அது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட, தலா ஏழு பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில், உங்களுக்கு அருகிலுள்ள நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்து அல்லது பொலிஸ் அவசர தொலைபேசியான 119 இற்கு அழைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.