‘தர்பார்’ விநியோகத்தில் என்ன பிரச்சினை என்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் பொங்கல் வெளியீடாக இந்தாண்டு திரைக்கு வந்தது. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால், இந்தப் படத்தின் மீது முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸை சந்திக்க சென்னை வந்தார்கள். அப்போது அளித்தப் பேட்டிகள் மூலம் இணையத்தில் பெரும் விவாதம் உண்டானது.
இதனிடையே, ‘தர்பார்’ படத்தில் என்ன பிரச்சினை என்பதை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் முன்னணி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியுள்ளார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், ஞானவேல்ராஜாவின் பதில்களும்!
அனுபவமிக்க தயாரிப்பாளராக ’தர்பார்’ பிரச்சினை பற்றிய உங்கள் கருத்து என்ன?
எல்லா தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்களும் தங்களுக்குத் தகுதியான சம்பளம் என்று ஒன்றை நிர்ணயித்துக் கேட்கிறார்கள். தயாரிப்பாளர்களும் அதைத் தருகிறார்கள். ஏனென்றால் அவர்களின் நட்சத்திர அந்தஸ்து நமக்கு ஆதாயமாக இருக்கும் என்று நினைத்து. ஆனால் படம் தோல்வியடையும்போது பிரச்சினை வருகிறது.
உதாரணத்துக்கு, 20 ரூபாய்க்கும் 5000 ரூபாய்க்கும் செருப்பு வாங்குவதைப் போலத்தான். ஒரே நாளில் சேதமடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? மலிவான செருப்பென்றால் தூக்கிப்போட்டுவிட்டு நல்ல செருப்பு வாங்குவீர்கள். அது விலை உயர்வான செருப்பாக இருந்தால்? சென்று நஷ்ட ஈடு கேட்க மாட்டீர்களா? ’தர்பார்’ விஷயத்தில் அதுதான் நடந்தது.
நடிகர்களை நஷ்ட ஈடு கேட்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?
ஒரு பெரிய படம் தோல்வியடையும் போது நடிகர்களையோ, மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களையோ நஷ்ட ஈடு கேட்பது சட்டப்பூர்வமாகச் சரி கிடையாது. ஆனால் இங்குத் தயாரிப்பாளரும் கூடத்தான் நஷ்டப்படுகிறார். அதனால் நஷ்ட ஈடு விஷயத்தில் நடிகரும், தயாரிப்பாளரும் தலையிட வேண்டும் என்பது தார்மீக ரீதியாக அவரவர் யோசித்து எடுக்க வேண்டிய முடிவே.
விநியோகஸ்தர்கள் படத்தைப் பார்த்து முதலீடு செய்தால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம் தானே?
படத்தைப் பார்த்து வாங்கும் வாய்ப்பு விநியோகஸ்தருக்கு வழங்கப்படுவதில்லை. குறிப்பாகப் பெரிய படங்களுக்கு. அது தேவையும் இல்லை என நினைக்கிறேன். ஒரு படத்தைப் பார்த்து அதன் மதிப்பை நிர்ணயிக்கும் அளவுக்கு அந்த நபர் உரிய அறிவு பெற்றிருக்கிறாரா? பணத்தை முதலீடு செய்த பின் அவர் அதைப் பார்க்கலாம். நான் ஒரு தயாரிப்பாளராக 40 கோடி முதலீடு செய்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் பணமே போடாத ஒருத்தருக்கு நான் எப்படி அதைத் திரையிட முடியும்? என்னால் முடியாது.
அப்படியென்றால் பட விநியோகம் என்பது ஒரு சூதாட்டம் தான் இல்லையா?
ஆம், ஆனால் நீங்கள் எதன் மீது யார் மீது பணம் வைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அது. இயக்குநரை நம்பியா அல்லது நடிகரை நம்பியா? தயாரிப்பாளரை நம்பி யாரும் பணம் போடுவதில்லை. நாளை லைகா ஒரு சிறிய படத்தைத் தயாரித்தால் விநியோகஸ்தர்கள் வரிசை கட்டி அந்தப் படத்தை வாங்க வருவார்களா? அப்படி வந்தாலும் அதை தர்பார் விலைக்கு வாங்குவார்களா?
’தர்பார்’ பிரச்சினை அதிக விலை என்பதால் தானா?
ஒரு நடிகரின் முந்தைய படத்தின் வியாபாரமே அடுத்த படத்தின் வியாபாரத்தைத் தீர்மானிக்கும். திரையரங்குகள் என்ன கேட்கின்றன என்பதும் முக்கியம். ’தர்பார்’ படத்தைப் பொருத்தவரை அது தவறான கணக்கு. ’பேட்ட’ வியாபாரத்தை வைத்து விற்றிருந்தால் இவ்வளவு பெரிய நஷ்டம் வந்திருக்காது. விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடும் கேட்டிருக்க மாட்டார்கள். இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.