இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமூல்படுத்தி வருகிறது.
வட மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுபடுத்தும் நோக்கில் தேசிய கொள்கைக்கு அமைவாக சில நடைமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் படி வடமாகாண ஆளுநர் சகல தரப்பினருக்கும் பணித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இவ்வருடம் பெப்ரவரியில் இருந்து வருகை தந்த, வருகை தருகின்ற பயணிகள் தொடர்பாக விபரங்களை கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுகொள்ளும் நடைமுறையை விரைவாக மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இவற்றை உரிய முறையில் நடைமுறைபடுத்தும் படியும் வட மாகாண அரச அதிபர்களுக்கு வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணித்துள்ளார்.
இவ் ஒழுங்குமுறை தொடர்பில் யாரும் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வடக்கு மாகாண மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையே இது என்றும், அனைத்து தரப்பினருக்கும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வட மாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் அமைச்சர் பந்துல குணவர்தன் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
——-
இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுள் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 50 மற்றும் 37 வயதுடைய ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.