கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த நிறுவனத்தை விலைக்கு வாங்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் முதலில் யார் மருந்து கண்டுபிடிப்பது என்ற போட்டி ஜெர்மனி-அமெரிக்காவிடையே போட்டி நிலவி வருகிறது. ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான கியூர்வேக், கொரோனாவிற்கு எதிரான மருந்தை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான மருந்தை தற்போது சோதனை செய்து வருவதால், அது வெற்றி மட்டும் அடைந்தால், வரும் ஜுலை மாதம் பயன்பாட்டு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த மருந்து நிறுவனத்தை 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் 7392 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையை டிரம்ப் நடத்தி வருவதாகவும், நிறுவனத்தை அமெரிக்கா வாங்கும் பட்சத்தில் முக்கிய நிபந்தனைகளை டிரம்ப் விதித்துள்ளதாகவும் ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, நிறுவனத்தை வாங்கினால், மருந்தை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யாமல் அமெரிக்காவுக்கு மட்டுமே என நிபந்தனைகளை விதித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து ஜெர்மன் பாராளுமன்றத்தின், சுகாதாரக் குழுவில் இருக்கும் உறுப்பினர் எர்வின் ரூடல், சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு தான் முக்கியமானது, தேசிய சுய நலன் முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் ஜெர்மன் பொருளாதார துறை அமைச்சர், அல்ட்மாயர், இது விற்பனைக்கு அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நிறுவனத்தின் சி.இ.ஓ கூறுகையில், தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிப்போம். அதை ஜெர்மனிக்கு மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்கும் கொடுக்கப்படும். இது தனிப்பட்ட நாடுக்கானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.