சுயநலத்திற்காக மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் போன்ற கிருமிகளை உற்பத்தி செய்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுள்ளார்.
செல்வந்த நாடுகளில் ஆராய்ச்சி என்ற போர்வையில் இவ்வாறு செயற்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
மனித உயிர்களோடு விளையாடுவதற்கு செல்வந்த நாடுகளுக்கு இடமளிக்க முடியாதெனக் குறிப்பிட்ட பேராயர், சிலரது சுயநலம் காரணமாக இலட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியாவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலி பூசைகள் தடை செய்யப்பட்டு, கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து பேராயரின் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. விசுவாசிகள் வீட்டிலிருந்தே அத்திருப்பலிப் பூசையில் பங்கேற்கும் வகையில் தொலைக்காட்சி மூலம் திருப்பலிப் பூசை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த திருப்பலியில் மறையுரையாற்றிய போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த பேராயர்;
கொரோனா வைரஸ் என்பது மனித சுயநலத்தின் விளைவு என்றே பார்க்கத் தோன்றுகிறது .சில சந்தர்ப்பங்களில் உணவு உற்பத்தியின் போது இயற்கைக்கு மாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. சில நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இயற்கையாகவன்றி செயற்கையான ரீதியில் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது.
பாரிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகளை பெருமளவில் மேற்கொள்கின்றனர். இயற்கையை மாற்றுவதற்கு இதன்மூலம் அவர்கள் முயற்சி செய்கின்றனர்.இதனால்தான் மனித உயிர்களுக்கு சவால்விடும் வகையில் பல்வேறு மோசமான நோய்கள் உருவாகின்றன.
மனிதன் கடவுள் மீதும் இயற்கை மீதும் வைக்கின்ற நம்பிக்கையை அலட்சியம் செய்யும் வகையான இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது தவறாகும்.
மத வழிகாட்டலுக்கு அப்பால் சுயநலமாக மனிதன் சிந்தித்து செயற்பட விழைவது முற்றிலும் தவறானது. இதனால் மனித வாழ்க்கையை முன்னேற்ற முடியாது. அழிவுகளையே சந்திக்க நேரும்.
ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் இத்தகைய ஆராய்ச்சிகள் மற்றும் முயற்சிகள் இரகசியமாக வெளிப்படைத்தன்மையின்றி மேற்கொள்ளப்படுவதே இத்தகைய வைரஸ்கள் உருவாக காரணமாகின்றன.
மனிதர்களுக்குள் இத்தகைய வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்துவதற்கு சர்வதேச ரீதியில் அமைப்பு ரீதியாக சில நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. இதன் மூலமே மனித இனத்திற்கு பெரும் அழிவைக் கொண்டு வரும் கொரோனா போன்ற வைரஸ்கள் உருவாகின்றன.
இத்தகைய திட்டமிட்ட செயற்பாடுகள் வறுமை நிலையில் உள்ள நாடுகளிலன்றி செல்வந்த நாடுகளிலேயே இடம்பெறுகின்றன. இது மனித வாழ்க்கைக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமும் அநீதியும் ஆகும் என்றும் பேராயர் மேலும் தெரிவித்தார்.(ஸ)
(லோரன்ஸ் செல்வநாயகம்)