இன்று முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இது பரவி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளை மூடி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 990 திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. உள்ளூரிலும், வெளி மாநிலங்களிலும் 36 சினிமா படப்பிடிப்புகளும், 60 டி.வி தொடர் படப்பிடிப்புகளும் பல்வேறு இடங்களில் நடந்து வந்தன. அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளியூர் படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை திரும்புகிறார்கள்.
படப்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ரமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வந்தது.
வட மாநிலங்களிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர். அஜித்குமாரின் ‘வலிமை’, கார்த்தியின் ‘சுல்தான்’ படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ் பட உலகம் 31-ந்தேதி வரை ரூ.150 கோடி இழப்பை சந்திக்கும் என்று தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கொரோனாவால் இந்தி திரையுலகில் ரூ.850 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.