இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (20) காலை 9 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தளம், கறுவலகஸ்வெவ, வணாதுவில்லுவ, பள்ளம, நவகத்தேகம, முந்தல், உடப்பு, சாலியவெவ, நுரைச்சோலை, சிலாபம், வென்னப்புவ, மாரவில, மாதம்பே, கொஸ்வத்தை, தங்கொடுவ, ஆராச்சிகட்டுவ மற்றும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளுக்கு மீண்டும் நண்பகல் 12 முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
——
கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்தார்.
தற்போது காணப்படும் சட்டம் போதுமானதாக இல்லையென்றால் புதிதாக சட்டமொன்றை இயற்றியாவது நாட்டினுள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என தெரிவித்த அவர், வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை சட்டமாக்குமாறும் தெரிவித்தார்.
இதேவேளை, புகைபிடித்தல் வைரஸ் பரவுவதில் நேரடி தாக்கத்தை ஏற்படுவத்துவதாக தெரிவித்த அவர், சிகரெட் விற்பனை மிகவும் அவதானத்திற்கு உட்பட்டது என தெரிவித்தார்.
புகைக்கும் நபர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சதவீதம் மிகவும் அதிகம் என தெரிவித்த வைத்தியர் ஹரித அலுத்கே, உயிரை நேசிப்பவர்களாயின் உடனடியாக புகைப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
—–
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முற்பகல் 10 மணி வரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் 243 பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையாக இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட வெலிகந்த ஆதார வைத்தியசாலை சுகாதார பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டுளளது.