கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டம் ஒன்று பற்றி கடும் கண்டனம் வெளியாகியுள்ளது. இந்த வைரஸில் இருந்து குணம் பெறுவதற்காக குர்ஆன் ஓதப்பட்டு நடத்தப்பட்ட இந்த பிரார்த்தனைக் கூட்டததில் சுமார் 10,000 முஸ்லிம்கள் பங்கேற்றிருந்ததாக உள்ளூர் பொலிஸ் அத்தியட்சகர் டொடா மியாஹ் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். எனினும் இந்த எண்ணிக்கை 30,000ஐ தாண்டி இருக்கலாம் என்று பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியாவில் இடம்பெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றினால் அந்நாட்டில் 500 க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவத்திற்கு மத்தியிலேயே இந்தப் பிரார்த்தனைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனால் அண்டை நாடுகளான ப்ருனாய், சிங்கப்பூர் மற்றும் கம்போடிய நாடுகளிலும் நோய்த் தொற்று பரவியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனுமதி இன்றியே பங்களாதேஷில் இந்தப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை பொறுப்பற்ற செயல் என்று பலரும் சாடியுள்ளனர்.
அதிகாரிகள் ஒருபுறம் பாடசாலைகளை மூடும்படியும், கூட்டத்தைத் தவிர்க்கும்படியும் உத்தரவிட்டு வரும் வேளையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் 18 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் சரியான சோதனை முறை இல்லாததால், மேலும் பலருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.