சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசை எதிர்கொள்வதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்றிரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார். இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
—–
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் இதனை தெரிவித்து உள்ளார். கொரோனா உறுதியான 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
——
இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கொரோனா வைரசை தடுத்து நிறுத்தவும் மற்றும் நாம் பாதுகாப்புடன் இருப்பதற்கும், சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பதே ஒரே வழியாகும். ஒவ்வொருவரும் மற்றவரிடம் இருந்து தொலைவில் இருங்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
இதன்பின் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை இந்தியா முழு அளவில் முடக்கப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், புதுடெல்லியின் லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் தொடர்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அமைச்சர்கள் அமரும் இருக்கைகளுக்கு இடையே இடைவெளி விடப்பட்டு இருந்தது.
——
கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் நடத்தும் போரில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவு வரலாற்றுத் திருப்புமுனையானது. பிரதமர் மோடி படைத்தலைவர், மக்கள் அவரின் படை வீரர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் புகழாரம் சூட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸ் தாக்கத்தால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் செயல்படுத்தும்போது பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் சூழல் ஏற்படும். அதைச் சரிகட்ட ப.சிதம்பரம் 10 வகையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
ஆனால், பிரதமர் மோடியைப் பாராட்டி ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை என்பது அவரின் தனிப்பட்ட கருத்து , அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸிலிருந்து நாட்டையும் , மக்களையும் காக்க மிகப் பெரிய முடிவை எடுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தொடர்ந்து கடந்த வாரங்களில் வலியுறுத்தி வந்தார். பிரதமர் மோடி நேற்று இந்த முடிவை அறிவித்தவுடன் அவர் ட்விட்டர் வாயிலாக மோடிக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த சூழலி்ல ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
”கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தது வரலாற்றுத் திருப்புமுனையான முடிவு. இந்த நேரத்தில் நாம் இதற்கு முன் செய்த விவாதங்களை, விமர்சனங்களைப் பின்னுக்குத் தள்ளிவைக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போரில் நாமெல்லாம் படை வீரர்களாக இருப்போம். மோடி படைத் தலைவராகச் செயல்படுவார்.
பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும்.
கரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரத்தைச் சிக்கலில் இருந்து மீட்க 10 வகையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். இதை அரசு பரீசலனைக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் ஏழை மக்கள் கையில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும். அனைத்து வகையான பொருட்கள், சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்துள்ளாகக் கொண்டுவந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நுகர்வை அதிகப்படுத்த வேண்டும்.
முதலாவதாக இப்போதுள்ள வேலை வாய்ப்பையும், ஊதியத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏழை மக்கள், விளிம்பு நிலை சமூகத்து மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.
பிரதமர் விவசாயிகள் (கிசான்திட்டம்) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை இரு மடங்காக்கி ரூ.12 ஆயிரத்தை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
கிசான் திட்டத்தில் இல்லாத விவசாயிகளை், அதாவது குத்தகை நிலத்தில் உழும் விவசாயிகளையும் இதில் இணைக்கக் கோரி மாநில அரசுகளிடம் கூற வேண்டும். அவர்களுக்கும் இரு தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கில் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். அதோடு ரூ.10 கிலோ அரிசி அல்லது கோதுமையை
அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் வழங்கிட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களையும், அவர்களின் ஊதியத்தையும் குறைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வார்டு வாரியாக, மண்டல் வாரியாக பதிவேட்டை உருவாக்கி வங்கிக் கணக்கில் பணம் பெறாதவர்களை அழைத்து அவர்களுக்குப் பணம் வழங்கிட வேண்டும். இந்தத் திட்டத்தில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களுக்கும் பணம் வழங்கிட வேண்டும்.
குறைந்தபட்ச விசாரணையுடன், ஆவணங்களுடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உருவாக்கி, அதில் ஆதார் அடிப்படையில், ஒவ்வொரு கணக்குதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்.
அனைத்து விதமான வரிகளையும் காலதாமதமாகச் செலுத்தலாம். ஜூன் 30-ம் தேதி வரை வரிகளைச் செலுத்த அவகாசம் வழங்கலாம்.
பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பெறும் வரி வருவாய் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கலாம். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கலாம்.
இந்தத் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் தற்போதுள்ள சூழலுக்காகனவை. மக்கள் கைகளில், குறிப்பாக ஏழை மக்கள் கைகளில் அதிகமான பணம் புழங்கும்போது பொருளாதாரம் மேல் எழும்பும். வேலைக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கம் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் உடனடி சவால். அடுத்தடுத்த நாட்களில் அடுத்துவரும் சவால்களை அடையாளம் காண்போம்.
மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே இருங்கள். ஸ்டே ஹோம் இந்தியா என்ற வாசகம் மிகப்பெரிய பேரணியாகும்”.இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.