பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று, உலகில் உள்ள 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா முடிக்குரிய இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டனின் கிளாரன்ஸ் ஹவுஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், ,” கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக கடந்த சில நாட்களாகவே தனிமையில் இருந்த இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ே
அவரது மனைவி காமில்லாவிற்கு சோதனை நடத்திய போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கின்றனர். சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றுகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, இளவரசர் சார்லஸ் மொனாக்கோவின் இளவரசரை மட்டுமே சந்தித்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது இளவரசர் சார்லஸ் ஆரோக்கியமாக உள்ளார் எனவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.