தனிமைப்பட்ட மம்தாவும் தனிமைப்படாத கமலும் !

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் பலர் அழைத்து நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது ஒருவர் உடல்நலம் குன்றினால் மட்டுமே செய்யும் விஷயம் என்று பலர் நினைக்கின்றனர்.

நான் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்ததால் நானே தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். அதுதான் விதிமுறை, உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள். ஆம், உலகமே இப்போது ஸ்தம்பித்துள்ளது. எனது படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அடுத்தது என்ன என்று யாருக்கும் தெரியாது.

இவ்வளவு நேரத்தை வைத்துக்கொண்டு இப்போது நாம் என்ன செய்வது?

* இதையே நினைத்து மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். பீதியை, பயத்தைப் பரப்பாதீர்கள்
* நீங்கள் இந்த நிலை குறித்துச் செய்ய முடிவது வீட்டிலேயே இருப்பது, கைகளைக் கழுவுவது (20 நொடிகள்), சுத்தப்படுத்துவது மட்டுமே. வேறொன்றுமல்ல
* இந்த நேரத்தைக் குடும்பத்துடன் பிணைப்பை வலுவாக்கச் செலவிடுங்கள்.
* நீங்கள் தனியாக இருந்தால் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனரீதியாக, ஆன்மிக ரீதியாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் பிஸியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படியென்றால் உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால் உங்கள் அறிவை இழந்து அந்த நேரத்தை வெளியே சென்று கழிக்கலாம் என்று வெளியே சென்று பொறுப்பற்று கோவிட் தொற்றுடையவராக மாறாதீர்கள். காலியாக இருக்கும் மனதில் மோசமான சிந்தனைகள் எளிதில் உதிக்கும்.
வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உங்கள் இடத்திலேயே நேரத்தைக் கழிக்க அழகான வழிகளைக் கண்டறியுங்கள். இது மற்றவர்களைப் பாதுகாப்பாக வைக்கவும் உதவும். நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும் வீட்டிலிருந்தே செய்யுங்கள். உங்கள் ஒட்டுமொத்த நாளையும் மொபைல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று செலவிடாதீர்கள். நேரத்தை ஒழுங்காகத் திட்டமிடுங்கள். வாழ்த்துகள். இந்தக் கட்டத்தைத் தாண்டி நாம் பத்திரமாக மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

——

நான் தனிமைப்படுத்தப்படவில்லை கமல் தகவல்..:

“உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகத் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்”
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Related posts