விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வருகிற 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் 14-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு இருப்பதால் தள்ளிப்போகிறது.
தமிழ் திரையுலகில் கொரோனா, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. வாரத்துக்கு 6, 7 படங்கள் திரைக்கு வந்த நிலையில் அவையும் முடங்கி உள்ளன. பெரிய பட்ஜெட் படங்களையும் ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு தள்ளிப்போகின்றன. இதனால் படத்தின் செலவுக்கு வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித்தொகை அதிகமாகும் என்று தயாரிப்பாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் வருகிற 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால் 14-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு இருப்பதால் தள்ளிப்போகிறது. ஊரடங்கை தளர்த்திய பிறகும் வருமானத்தில் சகஜ நிலைக்கு மக்கள் திரும்ப சில வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம்தான் ‘மாஸ்டர்’ வெளியாகலாம் என்று பட உலகில் பேசப்படுகிறது.
இதுபோல் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தையும் முடித்து இந்த மாதம் திரைக்கு கொண்டு வர இருந்தனர். அந்த படமும் தள்ளிப்போகிறது. ஏற்கனவே ரிலீஸ் தேதியை முன் கூட்டியே முடிவு செய்து விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருந்த அஜித்குமாரின் ‘வலிமை’, விக்ரம், கார்த்தியின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்புகள் முடங்கி உள்ளதால் குறிப்பிட்ட தேதியில் வெளிவராது என்றே கூறப்படுகிறது.
‘வலிமை’ படத்தை நவம்பர் மாதமும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதமும் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். இதுபோல் கார்த்தியின் ‘சுல்தான்’, சிம்புவின் ‘மாநாடு’, விஷாலின் ‘துப்பறிவாளன்-2’, விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, ‘மாமனிதன்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, தனுசின் ‘கர்ணன்’ போன்ற முன்னணி கதாநாயகர்கள் படங்கள் திட்டமிட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.