இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் 03.04.2020

ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நகர பகுதியில் உள்ள மதுபான சாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு 5 இலட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர் .

இன்று அதிகாலை சாஞ்சிமலை ஹட்டன் பிரதான வீதியில் வீதியின் புளியாவத்தை நகரில் உள்ள மதுபான சாலையின் முன் கதவு திறக்கப்பட்டு இருந்த பகுதியை சேர்ந்த நபர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-மலையக நிருபர் சதீஸ்குமார்-

——-

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 193.75 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

—–

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 27 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.

—–

கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோ தொற்று நோய் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று (02) பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் ஏனைய ஆறு பேருக்கும் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும அவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

ஆகையினால் அந்த ஆறு பேரும் பரிசோதனை முடிவுகளுக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனோ சந்தேகத்தில் போதனா வைத்தியசாலையில் மட்டும் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் 50 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதே வேளை வைத்தியசாலைக்கு வெளியே தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்ட 10 பேரில் 3 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய 7 பேர் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே போல தற்போதும் 10 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

——

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (02) காலை 6.00 மணி முதல் இன்று (03) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 1,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு இக்காலப்பகுதியில் 325 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 10,730 பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் 2,657 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

——

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (02) இரவு 10.20 மணியளவில் மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த குறித்த காரை நிறுத்துமாறு, எகொடஉயன பழைய வீதியில் உள்ள வீதித் தடையில் பணியிலிருந்த பொலிஸார் சமிக்ஞை வழங்கியுள்ளனர் ஆயினும் அதனை மீறி குறித்த கார் பயணித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மோதறை புதிய பாலத்திற்கு அருகில் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்டுள்ள, வீதித் தடையிலுள்ள அதிகாரிகளுக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வீதித்தடையிலுள்ள பொலிஸாரின் உத்தரவையும் மீறி குறித்த கார் பயணித்த நிலையில் இதன்போது கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கார் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனையும் மீறி குறித்த கார் பயணித்துள்ளதோடு, புதிய பாலத்திற்கு அடுத்த பக்கமாக உள்ள பாணந்துறை தெற்கு, பொலிஸ் நிலைய வீதித் தடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ்வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதிலும் இக்கார் நிறுத்தப்படாது சென்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டபோது, குறித்த கார் பாணந்துறை வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணித்த நால்வரில் மூவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி உள்ளிட்ட காயமடைந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts