சென்னையைத் தொடர்ந்து மதுரை, நெல்லையிலும் ரயில் பெட்டிகள் கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கரோனா வைரஸ் அதிகரிப்பதால் தடுக்க, அதற்கான பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கிறது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 15 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதித்தோர் வசித்த மதுரை அண்ணாநகர் மருது பாண்டியர் நகர், நரிமேடு, தபால்தந்திநகர் குறுநகர் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள பல்நோக்கு மருத்துவமனையின் கட்டிடம் கரோனா சிறப்பு மருத்துவமனையாகவே மாற்றப்பட்டு செயல்படுகிறது.
இந்நிலையில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மருத்துவ வசதி மற்றும் தனிமைப்படுத்துவதற்கான வார்டுகளை ஏற்படுத்தும் நிலைக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் கரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக அந்த கட்டிடங்களிலுள்ள வசதிகள் குறித்தும் கண்டறிந்து, தயார் நிலையில் இருக்க, ஆட்சியர் டிஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சென்னையை தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்டத்திலும் ரயில் பெட்டிகள் சிறப்பு வார்டாக மாற்றும் பணி நேற்று தொடங்கியது. மதுரை ரயில் நிலைய வளாகத்திலுள்ள ரயில்கள் பெட்டிகள் பராமரிக்கும் பணிமனை (லோக்கோ செட்) பகுதியில் கரோனாவால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் சிறப்பு வார்டு அமைக்கும் பணி நடக்கிறது.
இதையொட்டி 20 பெட்டிகளில் சுமார் 500 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டாக வடிவமைக்கப்படுகின்றது. இப்பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் ஒருவாரத்தில் இப்பணி முடியும் என்றும், நெல்லையிலும் 18 பெட்டிகள் சிறப்பு வார்டாக மாற்றும் பணி நடக்கிறது என,, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை சிறப்பு வார்டு தேவைப்பட்டால் ரயில் பெட்டிகளில் ஏற்படுத்திய சிறப்பு வார்டுகளில் பயன்படுத் துவோம் என, மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.