ஊரடங்குச் சட்டத்தை மீறிய 14795 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 312 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3665 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
——-
அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 199.40 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
—–
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 33 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
—–
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், இலங்கையில் ஸ்மார்ட்போன் பாவனை அதிகரித்துள்ளதை கூகிள் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
குறிப்பாக, வீடுகளில் இருந்து ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென கூகிள் அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் Location Data என்றழைக்கப்படும் பயனர்கள் இருக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைத் தொகுத்திருந்தது.
கொவிட்-19 தொற்றை அடுத்து, பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன.
இந்த முயற்சிகளுக்கு உதவி செய்வது கூகிள் நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதன் பிரகாரம், சில்லறை விற்பனை நிலையங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து தரிப்பிடங்கள் போன்றவற்றில் ஸ்மார்ட்போன் பயன்பாடு 50 சதவீதத்திற்கு மேலாக குறைந்துள்ளதென கூகிள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
—-
தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக முக நூல்களில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பல தடவைகள் இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டி வருகின்ற போதும் தொடர்ந்தும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வளைதளங்கள் ஊடாக இவ்வாறான பொய் பிரசாரங்ளை முன்னெடுத்து வருகின்றனர். இந் நிலையில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்படுவதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் மக்களுக்குள்ள நம்பிக்கையையும்அது இல்லாமல் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள கொரோனா தடுப்பு செயற்பாட்டுக்கான தேசிய மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
—-
கொரோனா வைரஸ் தாக்கத்தாலும் ஊரடங்கு நடைமுறையாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பொறிமுறையொன்றை வகுத்துக் கொள்வதற்கும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை சட்ட ரீதியாக எடுப்பதற்கும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டியது அவசியம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைக் கூட்டுவதில் ஆளுந்தரப்பினர் அக்கறை கொண்டிராவிட்டாலும் இன்றிருக்கக் கூடிய நிலைமையில் பாராளுமனறத்தைக் கூட்டுவதனூடாகவே பல்வேறு விடயங்களுக்கும் சரியானதொரு தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு குறிக்கப்பட்ட ஒரு காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் அதேபோல புதிய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்பதும் ஏற்கனவே ஒரு அரசியல் சாசனத்திற்கிணங்க அறிவிக்கப்பட்ட விடயங்களாக இருக்கின்றது. அதன் பிரகாரம் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடந்திருக்க வேண்டும். மே மாதம் பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.