ராஜீவ் கொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் மற்றும் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆகியோரை கொரோனா வைரஸ் பரவுவதை முன்வைத்து விடுதலை செய்யுமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 இற்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டு இயக்கங்கள் நேற்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக கி.வீரமணி (திராவிடர் கழகம்), பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி), கொளத்தூர் தா.செ.மணி(திராவிடர் விடுதலைக் கழகம்), கோவை .கு. ராமகிருஷ்ணன்(தந்தை பெரியார் திராவிடர் கழகம்), தி.வேல்முருகன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), இரா. அதியமான்(ஆதித்தமிழர் பேரவை), பேரா.ஜவஹிருல்லா (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), அன்புத் தென்னரசன்(நாம் தமிழர் கட்சி), இ.அங்கயற்கண்ணி(தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம்) ஆகியோர் உட்பட 55 இற்கும் மேற்பட்ட அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் ஒப்பமிட்டு இவ்வேண்டுகோளை நேற்று முன்தினம் விடுத்துள்ளனர்.
ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் கொரோனா தொற்று எளிதில் பரவும் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பலவீனமாக உள்ளவர்களை இந்த வைரஸ் விரைவாக தொற்றி உயிரிழப்பில் கொண்டுபோய் விட்டு விடும்.
இது இட நெருக்கடியில் வாடும் சிறையாளர்களைக் கடுமையான நெருக்கடியில் தள்ளிக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் சிறையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
நீதிமன்றம் கடந்த வாரம் சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்க உத்தரவிட்டது. விசாரணைக் கைதிகளை, பிணையிலோ அல்லது பரோலிலோ விடுவிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது போன்ற குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்க அந்தந்த மாநிலங்கள், உயர்நிலை குழு ஒன்றை அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசு ஏறத்தாழ கடந்த 10 நாட்களில் 3163 விசாரணை சிறைவாசிகளை விடுவித்துள்ளது. இன்னும் 10,000 க்கும் மேற்பட்ட கைதிகள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் சுகாதார வசதி இல்லாத சிறைச்சாலைகளில் நெருக்கடியோடு கொரோனா உயிர் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
பேராபத்தை விளைவிக்கும் இந்தச் சூழ்நிலையில் சிறையாளர்களை விடுவிப்பதில் தமிழக அரசு எவ்வித அரசியல் பாரபட்சமும், மத வேறுபாடும் காட்டக்கூடாது என சமூக அக்கறையுள்ளவர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருக்கின்றது.
இறுதி முடிவு எடுக்கப்படும் வரை அவர்களுக்கு நீண்ட நாள் பரோல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.