இணையத்தில் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வந்த நிலையில், புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘மாஸ்டர்’ படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, இன்று (ஏப்ரல் 9) வெளியாகி இருக்க வேண்டியது. கரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இன்று வெளியாகி இருக்க வேண்டிய படம் என்பதால், விஜய் ரசிகர்கள் காலை முதலே தங்களுடைய வேதனைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இன்று எப்படிக் கொண்டாடி இருக்க வேண்டியது, அடுத்தடுத்த காட்சிகள் பார்த்திருப்பேன் என்று பல்வேறு தகவல்களைக் கொட்டி வருகிறார்கள். சில திரையரங்குகளும் இன்று எங்கள் திரையரங்கம் எப்படி இருந்திருக்க வேண்டியது என ட்வீட் செய்திருப்பதைக் காண முடிந்தது.
தொடர் ட்வீட்களால் இந்திய அளவில் #MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனிடையே, ‘மாஸ்டர்’ படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஊரடங்கு நமது தன்னம்பிக்கையை வீழ்த்தி விடக்கூடாது. ‘மாஸ்டர்’ உங்களை விரைவில் சந்திப்பார்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில், “முதலில் உயிர் பிழைக்க வேண்டும். பின்பு கொண்டாடலாம்” என்று புதிய போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.
கரோனா அச்சம் அனைத்தும் முடிந்தவுடன், எப்போது வெளியீடு என்ற பேச்சுவார்த்தையில் ‘மாஸ்டர்’ படக்குழு இறங்கவுள்ளது. அதில் தேதி முடிவானவுடன் படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.