மாஸ்டர்’ கடந்துள்ள கஷ்டங்கள் குறித்து இயக்குநர் ரத்னகுமார் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, இன்று (ஏப்ரல் 9) வெளியாகி இருக்க வேண்டியது. கரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள், ட்விட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ கொண்டாட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று பகிர்ந்து வருகிறார்கள்.
இம்மாதிரியான தொடர் பதிவுகளால் இந்திய அளவில் #MasterFDFS என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. சில திரையரங்குகளும் இன்று எங்கள் திரையரங்கம் எப்படி இருந்திருக்க வேண்டியது என ட்வீட் செய்திருப்பதைக் காண முடிந்தது.
இந்தப் பதிவுகள் தொடர்பாக, ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதையிலும் வசனத்திலும் பணிபுரிந்த ‘ஆடை’ இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கரோனா தொற்று ஏற்படவில்லையென்றால் மாஸ்டர் தற்போது ரிலீஸ் ஆகியிருக்கும். பல சோகப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. ஒரு ரசிகனாக இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. காற்று மாசு, போராட்டங்கள், ரெய்ட், தற்போது இது. எப்படியோ நமக்குதான் இறுதி வெற்றி கிடைக்கும். உயிர் பிழைப்பதுதான் முதலில். பிறகுதான் கொண்டாட்டங்கள். திடீரென இந்த செல்ஃபி பழைய நினைவுகளைத் தூண்டுகிறது”.
இவ்வாறு இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.