ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை என்று தனது ட்விட்டர் பதிவில் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
மேலும், ஊரடங்கு அமலில் இருப்பதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஹிட்டடித்த படங்களை ஒளிபரப்பி வருகின்றன. இதனிடையே, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள வெப் சீரிஸ், படங்கள் எனப் பார்த்து பலரும் அதன் விமர்சனங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றர். இந்நிலையில், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொடர்கள் குறித்து முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களின் உள்ளடக்கங்கள் சில நாட்களில் சலிப்பூட்டுகின்றன. எல்லா தொடர்களும் ஒரே இருண்ட கதைகளைக் கொண்டுள்ளன. சிலவற்றைப் பார்த்த பிறகு அவர்கள் பின்பற்றும் முறை பழையதாகவும், கணித்துவிடக்கூடியதாகவும் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லை. கலை என்பது இப்போது ஒரு வியாபாரச் சரக்காகி விட்டது” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.