‘சித்தி’யை மீண்டும் ஒளிபரப்ப முடிவெடுத்ததில் எனக்குச் சந்தோஷமே என்று ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இந்த ஊரடங்கினால் தொலைக்காட்சிகள்தான் கடும் சிக்கலில் உள்ளன.
என்னவென்றால், பல்வேறு சீரியல்கள் அடுத்தடுத்த காட்சிகளின் தொடக்கம் இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்குப் பதிலாகப் பழைய ஹிட்டடித்த சீரியல்களை மறுஒளிபரப்பு செய்து வருகிறது.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சித்தி 2’ நிறுத்தப்பட்டு, அதே நேரத்தில் ‘சித்தி’ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழல் குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ராதிகா அளித்த பேட்டியில், “‘சித்தி’ தொடரை ஒளிபரப்ப முடிவெடுத்தது சேனல் நிர்வாகம்தான். ஆனாலும், ‘சித்தி’யை மீண்டும் ஒளிபரப்ப முடிவெடுத்ததில் எனக்கு சந்தோஷமே.
ஆனால், துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பணியாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிதான் எனக்கு அதிக கவலை இருக்கிறது. விரைவில் சூழல் பழைய நிலைக்குத் திரும்பி மீண்டும் பணிகள் தொடங்குவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக சீரியல்களின் பகுதிகள் குறித்த கேள்விக்கு, “வழக்கமாக இரண்டு வாரத்துக்கான பகுதிகள் எடுத்து வைத்திருப்போம். மேலும் சில எடிட் செய்யப்படாத காட்சிகளும் இருக்கும். அவசரத் தேவைக்கென எடுத்து வைத்திருப்போம். ஆனால் இந்த ஊரடங்கை யாருமே எதிர்பார்க்கவில்லை. அது எல்லாவற்றையும் நிற்க வைத்துவிட்டது. இது எங்கள் கட்டுப்பாட்டை மீறிய சூழல்” என்று ராதிகா குறிப்பிட்டுள்ளார்.