கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகளில் தற்போது நிலவும் நிலையில் செல்வந்த நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏழை நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன்களை இரத்துச் செய்ய வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அல்லது குறைந்த அளவிலான கடன் தவணையை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம் என்றும் பரிசுத்த பாப்பரசர் உலக மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு வத்திக்கான் புனித பீற்றர்ஸ் தேவாலயத்தில் ஈஸ்டர் மறை உரையாற்றியபோதே பரிசுத்த பாப்பரசர் இவ்வாறு தெரிவித்தார்.
மில்லியன் கணக்கான கிறிஸ்தவ மக்கள் தமது வீடுகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத்த பாப்பரசர் தனித்து நின்று ஈஸ்டர் வழிபாட்டினை நிறைவேற்றினார்.
உலகெங்கிலுமுள்ள 1.3 பில்லியன் கத்தோலிக்க மக்கள் இந்த வழிபாட்டினை தொலைக்காட்சிகள் ஊடாக பார்வையிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையாக ஈஸ்டர் பண்டிகை அமைவதுடன் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தின் 40 நாட்கள் நோன்பு ஜெப, தபங்களில் ஈடுபட்டு அதன் இறுதியில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு காரணமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடியாது போனமை குறிப்பிடத்தக்கது.