பட வேலைகள் பாக்கி இருப்பதால் ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது
தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படமான ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் தொடங்கினர். அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு, கொல்கத்தா மற்றும் புனேயில் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டனர்.
ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வடநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு ஐதராபாத்திலேயே படப்பிடிப்பை தொடர்ந்தனர். 60 சதவீதத்துக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். ஆனால் பட வேலைகள் பாக்கி இருப்பதால் ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும், நயன்தாரா வழக்கறிஞராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ கிராமத்து கதையம்சத்தில் உருவாகிறது.
இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனாவால் நின்று போன ‘அண்ணாத்த’ படத்தின் மீதி காட்சிகளை படமாக்க வேண்டி இருப்பதால், புதிய படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.