கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள தற்போதைய நிலையில் திரையரங்குகள் மே 3 வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன. பல வாரங்களாக இயங்காத நிலையில் திரையரங்குகள் புதிய சிக்கலைச் சந்தித்து வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 11,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். அதன்படி, மே 3 வரை திரையரங்குகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப் போற்று, தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்த பூமி உள்ளிட்ட படங்களின் வெளியீடு மேலும் தள்ளிவைக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் திரையரங்கு உரிமையாளர்கள் புதிய சிக்கலைச் சந்தித்து வருகிறார்கள். ஏற்கெனவே திரையரங்குகள் இயங்காததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். மேலும் சோதனையாக, திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை எலிகள் கடித்து நாசம் செய்வதாகத் தற்போது கூறியுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாக திரையரங்குகள் இயங்காத நிலையில் அதைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மால்களில் உள்ள திரையரங்குகளில் எலிகள் உள்ளே புகுந்து இருக்கைகளைக் கடித்து நாசம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு இருக்கையும் ரூ. 5000 விலைக்கு வாங்கியது என்பதால் தற்போது வருமானம் எதுவும் இல்லாத நிலையில் மேலும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால் திரையரங்குகளில் உள்ள விளக்குகளை நாள் முழுக்க அணைக்காமல் இருப்பதால் இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது. இத்தகவல் தமிழ்நாட்டில் உள்ள எல்லாத் திரையரங்குகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளைப் பரிமாரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.