இராணுவத்தினரை பாதுகாக்க முழு அளவில் அர்ப்பணிப்பு செய்ய தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராணுவத்தினர் தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் இன்று (30) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தினர் தொடர்பான சித்தரிக்கப்பட்ட அவ்வாறான புகைப்படங்கள் வெளிநாட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விடுமுறையில் சென்றுள்ள இராணுவத்தினரை தங்க வைக்க 11 கட்டடங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த கட்டடங்களை கொழும்பு, முல்லைத்தீவு மற்றும் மத்திய மாகாணங்களில் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறினார்.
இராணுவத்தினர் நிலத்தில் தூங்குவது போன்று அந்த புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட இடங்களில் அவ்வாறான நிலைமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த இடங்கள் தொடர்பில் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் முழுமையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இராணுவத்தினரை இவ்வாறு அசெகரியப்படுத்தும் நோக்கம் இல்லை எனவும் அவர் கூறினார்.
இராணுவத்தினருக்கு மரக் கிளைகளில் கூட நித்திரை செய்வதற்கான தைரியம் உள்ளதாகவும் கடந்த யுத்த காலப்பகுதியில் அவ்வாறான அனுபவத்தை இராணுவத்தினர் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை ஆரம்பித்த நாட்களில் இராணுவத்தினர் தங்கள் கட்டில்களை மக்களுக்கு வழங்கி நிலத்தில் தூங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினர் மக்களுக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.