நெருக்கடியான காலத்தில் பாதுகாப்பான வாழ்வு.
சகோதனை;.பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்திப்;போம்.
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. ஏசாயா 49:16.
இந்த நற்சிந்தனையை முழுமையாக விளங்கிக்கொள்ள வேதப்புத்தகம் உள்ளவர்கள் ஏசாயா 49ம் அதிகாரம் முழுவதையும் ஒருமுறை வாசிக்கவும். அப்போதுதான் புரிந்து கொள்வீர்கள் தேவன் எப்படியாக தாம் தெரிந்துகொண்ட மக்களை பூரணப்படுத்துகிறார் என்று. முதலாம் வார்த்தையில் தேவசித்தம் தேட வேண்டியதன் அறிவுரையும், இறுதிவார்த்தையில் அதனால் வரும் தேவபெலனையயும் நமக்கு இது வெளிப்படுத்துகிறது.
மேலே நாம் வாசித்த இந்த தேவனின் வாக்குத்தத்தம் (வாக்குறுதி) நமது உள்ளத்தை உருகச்செய்கிறது. இதிலே ஆண்டவருடைய அளவற்ற அன்பையும், மனதுருக்கத்தையும், தியாகமான காருண்யத்தையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. யாருக்கு தேவன் தமது உள்ளங்கையை காண்பிக்கிறார்? தேவன் எங்களை கைவிட்டுவிட்டார் எனப்புலம்பும் மக்களுக்கும், தேவன் தங்களை மறந்து விட்டார் என முறுமுறுக்கும் மக்களுக்குமே.
இந்த உண்மையை வேதம் இவ்வாறு வெளிப்படுத்துகிறது. சீயோனோ, கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள் என்று. வச.14. கர்த்தர் நம்மை ஒரு தடவையும் மறப்பதில்லை. காரணம் அவர் நம்மை தன்னை ஆராதிக்கும் படியாக படைத்தவர். அது மட்டுமல்ல தாம்படைத்த மக்கள் தமது மகாபெரிய இரக்கத்தைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதில் அதிக அக்கறையுள்ளவர். அதனால் அவர் இவ்வாறு தனது இருதயத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறார்.
ஸ்திhPயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை என்று. வச.15.
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா44: 21.
இன்று அவர் தமது உள்ளம் கையைக் காண்பித்து உனக்கும் எனக்கும் சொல்கிறார், உன்னையும் என்னையும் தமது உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று. இன்றிலிருந்து கடவுள் இல்லை என்றும், கடவுள் எங்களை கைவிட்டுவிட்டார் என்றும் சொல்லாதிருப்போம்.உங்களின் மனக்கண்களுக்கு முன்பாக தேவனுடைய உள்ளங் கையை நிறுத்தி அதிலே நாம் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் வாழ்வோம். அவரின் கரத்தின் தன்மைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வனையும் கரங்கள்.
இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். எரேமியா 18:6. பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாக வாழ்ந்த எம்மை தேவன் மீண்டும் தமது கரத்தினால் வனைந்து, தமது பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். தேவதூதர்களும் பாவம் செய்தனர். தேவன் படைத்த மக்களும் பாவம் செய்தனர். தேவன் மக்களுக்கு மட்டும் ஓர் சர்ந்தப்பம் கொடுத்தார்.
நாம் கீழ்வரும் வார்த்தையை நன்கு உணர்ந்தால் இதனை விளங்கிக்கொள்ள முடியும். இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. ஏசாயா 64:8.
தேவனுக்கு செவிகொடாமல் வழிவிலகிய மக்கள் தங்களின் தவறை உணர்ந்து, தேவனிடம் அவரின் வாக்குறுதியை நினைவுபடுத்தி தமக்கு இரங்கும் படியாக மன்றாடினார்கள். தேவன் அவர்களின் மன்றாட்டைக் கேட்டு அவர்கட்கு இரங்கி தமது பிள்ளைகளாக மீண்டும் வனைந்துகொண்டார் (ஏற்றுக்கொண்டார்).
கழுவும் கரங்கள்.
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக் கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். யோவான் 13:6.
அன்று இயேசு தமது சீசர்களின் பாதங்களைக் கழுவி தேவனுடைய இராட்சியத்தின் தாழ்மையை தெளிவுபடுத்தினார். அதே கரத்தை ஆணிகள் கடாவப்பட தம்மைத் தாழ்தி சிலுவை மரணத்தின்மூலம் அவருடைய இரத்தம் நமது பாவங்களை கழுவி நம்மை சுத்தப்படுத்த தமது கரங்களை ஓப்புக்கொடுத்தார்.
அந்த இரத்தத்தினால் யார்யார் தங்களுடைய அங்கியைத் தோய்த்து வெளுக்கிற வர்களோ அவர்கள்தான் சீயோன் பர்வதத்தில் காணப்பட முடியும். உங்களுடைய எதிர்காலம் உங்களுடைய கரத்தில் அல்ல. உங்களுக்காக தம்முடைய உள்ளங் கைகளை ஆணி கடாவ நீட்டிக்கொடுத்து, உள்ளங் கைகளில் வரைந்தவரிடத்தில் உள்ளது. உங்களின் நித்தியமும் அவரின் கைகளில் உள்ளது. அதே கரம் இன்று மானிடத்தின் பாவங்களை நீக்கும் படியாக நீட்டப்படுள்ளது.
அரவணைத்து, குணமாக்கி, ஆசீர்வதிககும் கரங்கள்.
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள் மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். மாற்கு 10:16.
நாம் புதிய ஏற்பாட்டில் முதல் நான்கு சுவிஷேசங்களையும் வாசித்துப்பார்த்தால், இயேசு தமது கரத்தினால் மக்களை அரவணைத்து ஆசீர்வதித்ததையும், அவர்களின் குறைகளைநீக்கி ஆறுதல் படுத்தியதையும், நோய்களைநீக்கி குணப்படுத்தியதையும் நாம் பல இடங்களில் காணலாம். அன்று குஸ்டரோகிகள் அவரிடத்தில் போனார்கள். அவர் அத்தனை பேரையும் தமது கரத்தால் தொட்டு குணமாக்கினார். குருடர்களை தொட்டு குணமாக்கினார். வியாதித்தர்கள்மேல் கைகளை வைத்து குணமாக்கினார். துன்பப்பட்ட மக்கள்மேல் மனதுருகி அவர்களை ஆசீர்வதித்தார்.
இன்று உங்களிடம் அன்பாக தமது கரத்தை நீட்டியவண்ணம், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அன்புடன் அழைக்கிறார். அந்த அன்பான அழைப்பை ஏற்று என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.
அன்பான இயேசு அப்பா, இன்று நீர் என்மேல் கொண்டுள்ள மிகப்பெரிய அன்பை மேலே உள்ள உமது வாக்குத்தத்தின் மூலம் அறிய உதவிநீரே அதற்காக உமக்கு நன்றி அப்பா. பாவங்களில் இருந்து எனக்கு விடுதலை தந்து, பலவித சோதனைகளில் இருந்து காத்து, உமது ஆசீர்வாதத்தினால் என்னை ஆசீர்வதித்து, இன்றைய நெருக்கடியான காலத்தில் பாதுகாப்பாக வாழும்படியாக என்னை உமது உள்ளங்கைகளில் வரைந்ததை உணரும்போது நான் எம்மாத்திரம் என்று உணர்கிறேன். அந்த மேலான அன்பை எனது வாழ்நாள் முழுவதும் நினைத்து வாழ என்னை உம்முpடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன். என்னைக்காத்து வழிநடத்தி ஆண்டுகொள்ளும் நல்ல பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.